அமர்களம் படத்தில் கமல்ஹாசன்.. இதனை எத்தனை பேர் கவனித்தீர்கள்!

அஜித் மற்றும் ஷாலினி நடிப்பில் உருவான அமர்க்களம் படம் வெளியாகி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. காதல் மன்னன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அமர்க்களம் படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியானது. பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிக் குவித்த இப்படம் பின்னர் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ரிலீசாகி 22 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்தின் 25 வது படமான அமர்களம் படத்தில் ஷாலினி, நாசர், ராதிகா, சார்லி, தாமு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதலில் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவை தான் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்க மறுத்து விட்டாராம்.

அதற்கு பின்னர் தான் ஷாலினியை அணுகி உள்ளார் சரண். ஆனால் அந்த சமயத்தில் படித்துக் கொண்டிருந்ததால் அவரும் மறுத்துள்ளார். இருந்தாலும் விடாமல் பேசி, 3 மாதங்களுக்கு பிறகு ஷாலினியிடம் சம்மதம் வாங்கி உள்ளார் சரண். இதே போல் வில்லன் துளசி கேரக்டரில் நடிக்க முதலில் அமிதாப் பச்சனிடம் தான் கேட்கப்பட்டுள்ளது. அவரும் முதலில் ஓகே சொல்லி விட்டு, பிறகு படத்தில் இருந்து விலகி உள்ளார். அதற்கு பிறகு தான் ரகுவரனிடம் பேசி உள்ளனர்.

இந்த படத்தில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் பல சீன்களில் கமல் வந்து போவது தான். இந்த படத்தில் கமல் நடிக்கவில்லை. இருந்தாலும் கமல் நடித்த படங்களின் போஸ்டர்கள் வந்து கொண்டே இருக்கும். கதைப்படி ஹீரோ வாசு, சினிமா தியேட்டரில் தங்கி இருப்பார்.

அஜித் தேவர்மகன் போஸ்டரில் படுத்திருப்பது, ரகுவரன் கேரக்டர் என்ட்ரி கொடுக்கும் போது பின்னணியில் நாயகன் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது, ரகுவரன் பிளாஷ்பேக் சொல்லும் போது ஒரு கைதியின் டைரி படத்தின் போஸ்டர் இருப்பது, ஷாலினி அஜித்தை சந்திக்க வரும் போது பின்னால் நிழல் நிஜமாகிறது பட போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது என பல இடங்களில் கமல் பட போஸ்டர்கள் வந்து போகும்.

ஆனால் இதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் உள்ளதா என இதுவரை சொல்லப்படவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்