ஹீரோயின்களை கேவலப்படுத்தும் தமிழ் சினிமா.. முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள்!

அறுபது, எழுபது காலகட்டங்களில் எல்லாம் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கப்பட்டது. அப்போது நடித்த நடிகைகளை எல்லாம் ஒரு அந்தஸ்தில் வைத்து காப்பாற்றி வந்தனர். நடிப்பை பொருத்தவரை அவர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்தது.

இதனால் தான் அவர்களின் நடிப்பு இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது இருக்கும் தமிழ் சினிமாவில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. என்பது காலகட்டங்களில் ஆரம்பித்து இப்போது வரை தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

பெண்மையை போற்றும் வகையில் வெகு அரிதாக சில திரைப்படங்கள் வந்தாலும், பல திரைப்படங்களில் கதாநாயகி வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார். மேலும் பார்க்கவே அருவருக்கத்தக்க வகையில் பல காட்சிகளும் தமிழ் சினிமாவில் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சின்ன கவுண்டர் திரைப்படத்தில் பலரும் முகம் சுழிக்க வைக்கும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. அதாவது விஜயகாந்த் ஒரு போட்டியில் தோற்றுப் போன சுகன்யாவுக்கு தண்டனை தரும் விதமாக அவருடைய வயிற்றில் பம்பரம் விடுவார்.

இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திலும் இடம் பெறாத இப்படி ஒரு காட்சி பலரையும் அதிர்ச்சி ஆக்கியது. ஆனாலும் அந்தக் காட்சி இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது தான் வேதனை. இந்த காட்சியை பார்த்த பலரும் அதன் பிறகு இதுபோன்ற காட்சிகளை தங்கள் படங்களில் வைக்க ஆரம்பித்தனர்.

அந்த வரிசையில் பிரபுதேவா, நக்மா நடித்த லவ் பேர்ட்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றது. அதில் பிரபுதேவா, நக்மாவின் வயிற்றில் ஆம்லெட் போடுவார். பார்க்கவே கூசும் அளவிற்கு இருந்தது அந்தக் கேவலமான காட்சி. ஆனால் அப்போது அந்தக் காட்சியை ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர்.

அதே போன்று தற்போது தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புகளை கொடுத்துவரும் இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் சரளமாக கெட்ட வார்த்தை பேசுகின்றனர். அந்த வகையில் வடச்சென்னை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா போன்ற ஹீரோயின்கள் பல கெட்ட வார்த்தைகளைப் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெண்களை போற்ற வேண்டும் என்று பெண்களுக்காக பல அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சமூகப் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டிய சினிமா துறை தற்போது வியாபார நோக்கில் மட்டுமே இருந்து வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்