மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு படமும் அமையவில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் படங்களை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
ஏற்கனவே சினிமா ரசிகர்கள் பலரும் சமீபத்திய ஊரடங்கு காலகட்டங்களில் நேரடியாக ஓடிடி தளங்களில் புதிய படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் அதிகமாக இருந்தது.
முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டும்தான் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வரும் என்பதை மாஸ்டர் படத்திற்கு பிறகு அனைவரும் அறிந்து கொண்டனர். இதனால் தியேட்டர்காரர்கள் மாதத்திற்கு குறைந்தது ஒரு பெரிய நடிகரின் படம் ஆவது வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
அந்தவகையில் இந்த வாரம் ஹாலிவுட் படம் ஒன்று வெளியாக உள்ளது. காட்சில்லா vs காங் படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் கணிசமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த வாரம் ஹாலிவுட் படம், அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் கார்த்தி நடிப்பில் வெளியாகும் சுல்தான் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே நம்பி இருப்பதாகவும், இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என்றால் தியேட்டருக்கு பூட்டு போட்டுவிட்டு பின்னால் திருமண மண்டபமாக மாற்றிவிட வேண்டியதுதான் என பல தியேட்டர்காரர்கள் முடிவு செய்துவிட்டார்களாம்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் ரிசல்ட் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்தே தியேட்டர்காரர்களின் தலையெழுத்து இருக்கும் என்பதால் புதிய படங்களுக்கு சொந்தமாகவே விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.