புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஏவிஎம்.. தமிழ் ராக்கர்ஸை மிரட்ட வரும் கூட்டணி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து நிலைத்து நிற்கும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் சில வருடங்களாக எந்த படங்களையும் தயாரிக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

அதுவும் ஒரு தரமான கதையுடன் களமிறங்கி இருக்கும் இந்த நிறுவனம் இனி அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏவிஎம் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரை தயாரித்துள்ளது.

ஈரம் படத்தை இயக்கியிருந்த அறிவழகன் இந்த வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். அருண் விஜய், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. டீசர் வெளியான சிறிது நேரத்திற்குள்ளாகவே 4.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏவிஎம் தேர்ந்தெடுத்த கதை மட்டும்தான்.

இதன் தலைப்பை பார்த்ததுமே அனைவருக்கும் புரிந்திருக்கும் இது எவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கதை என்று. ஒரு காலத்தில் தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த சினிமா துறைக்கே சவாலாக இருந்தது தான் இந்த தமிழ் ராக்கர்ஸ். கஷ்டப்பட்டு ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டால் அந்த படம் வெளிவருவதற்கு முன்பே இந்த தமிழ் ராக்கர்ஸின் வலைத்தளங்களில் வெளியாகி விடும்.

இதனால் ஒட்டு மொத்த திரையுலகமும் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழலும் ஏற்பட்டது. இந்த முக்கியமான பிரச்சினையை தான் தற்போது ஏவிஎம் நிறுவனம் வெப் சீரிஸாக தயாரித்துள்ளது. கஷ்டப்பட்டு எடுத்த படம் திருட்டுத்தனமாக வெளியானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு வலியையும், மன உளைச்சலையும் கொடுக்கும் என்பது இந்த தொடரில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த டீசர் இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் ஏவிஎம் நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் ஏவிஎம்மின் அவதாரம் கோலிவுட்டையே கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்தடுத்து ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திற்கு படங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் மீண்டும் வாரிசுகள் அப்பா விட்டதை பிடித்து விடுவார்கள் என்று நம்புகிறது கோலிவுட் வட்டாரம்.

- Advertisement -

Trending News