தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் உலக அளவில் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல், ட்ரைலர் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படக்குழுவினர் தற்போது படத்தை புரமோஷன் செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது பல யூடியூப் சேனல்களுக்கும் விக்ரம் படம் தொடர்பாக பேட்டி அளித்து வருகிறார்.
அதில் அவரிடம், இதற்கு முன்பு நீங்கள் இயக்கிய திரைப்படங்களில் ஏதேனும் மாற்றம் செய்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது உண்டா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு ஆச்சரியமான பதிலை அளித்துள்ளார்.
அதாவது அவர் விக்ரம் திரைப்படத்திற்கு முன்பு இயக்கிய 3 திரைப்படங்களிலும் சில மாற்றம் செய்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி அவர் இயக்கிய மாநகரம் திரைப்படத்திற்கு முன்பு வேறு இயக்குனரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணிபுரிந்து இருந்தால் மாநகரம் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அடுத்து கைதி திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் கூட கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரண்டாவது பாதியில் சில காட்சிகள் திருப்திகரமாக இல்லை.
அதனால் கதை எழுதிய நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்போது இயக்கி முடித்துள்ள விக்ரம் திரைப்படம் எல்லா விதத்திலும் எனக்கு திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
ஆனால் ஒரு பத்து வருடம் கழித்து பார்த்தால் இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றும். ஆனால் இப்போது பார்க்கும்போது அந்தப் படத்தில் எந்த குறையும் இல்லை. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த எல்லா அம்சமும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் கூறியிருக்கும் இந்த சுவாரஸ்யமான பதில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. வெற்றி இயக்குனர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் தன்னடக்கத்துடன் பேசிய லோகேஷ் கனகராஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.