தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் தூணாக இருக்கும் இவர் பல புதிய தொழில்நுட்பங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். இவர் அளவுக்கு யாராலும் சினிமாவை நேசிக்க முடியாது.
அந்த அளவுக்கு சினிமா தான் என்னுடைய மூச்சு என்று இவர் பல சமயங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களும் நம்மை ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கும். அந்த வகையில் இவர் நடிப்பில், கே பாலச்சந்தர் இயக்கிய மரோ சரித்ரா என்ற தெலுங்கு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
பிறகு இப்படத்தை பாலச்சந்தர் ஹிந்தியில் கமலை வைத்தே ரீமேக் செய்து இருந்தார். கமலின் நடிப்பில் வெளியான இரண்டாவது இந்தி படமான இப்படம் கிட்டத்தட்ட ஐந்து கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. உலக அளவில் இப்படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து. அந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு சாதனையை எந்த தென்னிந்திய நடிகரும் செய்தது கிடையாது.
அதுமட்டுமல்லாமல் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் திரைப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் 1996ம் ஆண்டில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. அதேபோல தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது.
தமிழைப் போலவே இப்படம் இந்தி, தெலுங்கில் 65 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. அப்போதைய சினிமாவில் இது ஒரு ரெக்கார்டாகவே பார்க்கப்பட்டது. மேலும் அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு கமலின் இந்த சாதனையை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.
இதனால் பாலிவுட் திரையுலகமே அவரை மிரண்டுபோய் பார்த்தது. கமலின் நடிப்பு திறமையும், அவருக்கு இருக்கும் ரசிகர்களையும் பார்த்த பாலிவுட் திரையுலகம் கமலை அங்கு வளரவிடாமல் செய்ய பல சதி வேலைகளை செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இவ்வாறு எத்தனை தடைகள் வந்தாலும் இன்று அவர் ரசிகர்கள் போற்றும் உலக நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.