இந்த வருடம் 4 தரமான இயக்குனர்களுடன் கூட்டணி போடும் சூர்யா.. அடுத்த ஆஸ்கருக்கு போட்ட பக்கா பிளான்

ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், வினய் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக பல திரைபடங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஏற்கனவே சூர்யா இயக்குனர் பாலா உடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இது தவிர அவர் வெற்றிமாறனுடன் இணையும் வாடி வாசல் என்ற திரைப்படமும் இருக்கிறது. இதற்காக அவர் கேரளாவின் பிரபல களரி வித்தையை பற்றி பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சூர்யா தற்போது மேலும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார்.

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். அதோடு இறுதிசுற்று, சூரரைப்போற்று, பாவ கதைகள் உள்ளிட்ட படைப்புகளை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பது அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்து இந்த நான்கு புதிய திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப் பட்டவையாகும். இந்த வருடத்தில் அடுத்தடுத்து சூர்யா முன்னணி இயக்குனர்களின் திரைப்படத்தில் இணைய இருப்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஒரே நேரத்தில் இத்தனை படம் நடிக்கும் சூர்யாவை பார்த்து தற்போது திரையுலகமே ஆச்சரியத்தில் இருக்கிறது.