தேடி போய் உதவும் ராகவா லாரன்ஸ்.. இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா!

ஜெய்பீம் திரைப்படத்தின், உண்மை கதாபாத்திரத்திற்காக ராகவா லாரன்ஸ் பணம் கொடுத்து உதவியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் டி.எஸ். ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த வருடம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில், போலீசாரால் கைதாகி லாக்கப்பில் கொல்லப்படும் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன், செங்கேணி கதாபாத்திரத்தில் லிஜோமோ ஜோஸ் நடித்து அசத்தியிருப்பர். இருளர் சமுதாயத்தினர் மீது கபொய் வழக்கு தொடுத்து அவர்களை லாக்கப்பில் வைத்து அடித்து துன்புறுத்தும் போலீசாரின் செயல் குறித்த உண்மையான சம்பவம் இத்திரைப்படத்தில் அழுத்தமாக காண்பிக்கப்பட்டு இருக்கும்.

இத்திரைப்படம் வெளியாகி தமிழக முதல்வர் முதல் ரசிகர்கள் வரை பல நாட்கள் உறங்காமல் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், உண்மையான கதாபாத்திரங்களிடம் பல பேட்டிகள் நடத்தப்பட்டது. அதில் உண்மையான செங்கேணியான வயது முதிர்ந்த நிலையில் இருந்த பார்வதி, அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கொடூரமான நிகழ்வை பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது மழை நீர் ஒழுகக்கூடிய சரியான வசதி வாய்ப்புகள் கூட இல்லாத கூரை வீட்டில் வசிக்கும் பார்வதிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டித்தர முடிவு செய்தார். அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த போது, தமிழக அரசு சார்பாக அவருக்கு வீடுகட்டித்தரப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனிடையே வீடுகட்ட வைத்திருந்த பணத்தினை ராகவா லாரன்ஸ் பார்வதிக்கு கொடுத்து உதவியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், அவருக்குக்காக எடுத்து வைத்த பணத்தினை அவருக்கே கொடுப்பது தான் சரியானது, அவர் வேறு ஏதாவது தேவைக்காக கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளட்டும் என பெருந்தன்மையுடன் பேசியுள்ளார். ஏற்கனவே ராகவா லாரன்ஸ் பலருக்கும் கல்வி உதவி, மருத்துவ உதவி, என பல சமூக செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் வயது முதிர்ந்த பார்வதிக்கு பணம் கொடுத்து உதவியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளில் தற்போது வரை சிக்கி உள்ள வேளையில், இதுபோன்று உதவிகள் பாதிக்கபட்டவர்களுக்கு கிடைப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்