ஜெயிக்க போராட துடிக்கும் 5 சினிமா வாரிசுகள்.. எப்படியோ அப்பா பேரை கெடுக்காம இருந்தா சரி

எத்தனை திறமையுள்ள புதுமுக நடிகர்கள் வந்தாலும் சினிமாவை பொறுத்தவரை அதிகப்படியான வாய்ப்புகள் செல்வது வாரிசு நடிகர்களுக்கு மட்டும் தான். அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் தற்போது வரை 5 கலை வாரிசுகள் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

துருவ் விக்ரம்: விக்ரமின் அப்பாவான வினோத் ராஜ் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு விக்ரம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளம் படைத்தார். தற்போது அவரது மகனான துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தனது தந்தையுடன் இணைந்து மகான் என்ற படத்திலும் நடித்தார். இருப்பினும் அவருடைய தந்தை அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நடிகராகவே தெரிகிறார்.

சிபிராஜ்: வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் சத்யராஜ் தனது மகன் சிபிராஜ் உடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்து அவருடைய வெற்றிக்காக உறுதுணையாக நின்றார். ஆனால் சத்யராஜ்க்கு கிடைத்த வரவேற்பு சிபிராஜ்க்கு கிடைக்கவில்லை. இருப்பினும் திறமையான நடிகராக ஜெயிக்க வேண்டும் என சிபிராஜ் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

சாந்தனு: இயக்குனராகவும் நடிகராகவும் 80-களில் தமிழ் சினிமாவை கலக்கிய பாக்கியராஜ், தன்னுடைய ஒரு சில படங்களில் மகன் சாந்தனுவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு சாந்தனு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இருப்பினும் அவருடைய படங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தது. இதனால் சாந்தனு முருங்கைக்காயை வைத்து ஒரு கலக்கு கலக்கிய பாக்கியராஜின் உத்தியை பயன்படுத்தி முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

விக்ரம் பிரபு: தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்தவர் செவாலியர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பிற்கு என்று இன்று வரை பல ரசிகர்கள் உள்ளனர். அவரது மகனான பிரபு தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து கலக்கினார். அதன் பிறகு இவரது மகனான விக்ரம் பிரபுவும் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை நடித்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

அருண் விஜய்: நாட்டாமை என்றாலே இவர் முகம் தான் அனைவரின் மனதிலும் தோன்றும் என்கின்ற அளவிற்கு தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் கலக்கிய நடிகர் விஜயகுமார் தற்போது வரை தமிழ் சினிமாவிற்கு தன்னுடைய பங்களிப்பை அளித்து கொண்டிருக்கிறார்.

இவருடைய மகன் அருண் விஜய் வாரிசு நடிகராக சினிமாவில் மிக எளிதாக நுழைந்து தம்முடைய முழு முயற்சியை அடுத்தடுத்த படங்களில் கொடுத்தாலும் இவரால் தற்போது வரை முன்னணி நடிகராக மாற முடியவில்லை. அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் 3வது தலைமுறை வாரிசாக ‘ஓ மை டாக்’ என்ற படத்தில் தாத்தா அப்பாவுடன் இணைந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஆனால் எத்தனையோ புதுமுக நடிகர்கள் சினிமாவில் ஜெயித்து கொண்டிருந்தாலும் இந்த 5 வாரிசு நடிகர்கள் தங்களுக்கென ஒரு இடத்தை பெறுவதற்காக விடாமுயற்சியுடன் தற்போது வரை போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Next Story

- Advertisement -