Maaveeran Movie Review- உரிமைக்கு போராடும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Maaveeran Movie Review: மண்டேலா படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மடோன் அஸ்வின் மாவீரன் மூலம் களம் இறங்கியுள்ளார். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் இன்று ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவன் மாவீரனாக எப்படி மாறுகிறார் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. பத்திரிக்கையில் கார்ட்டூன் வரையும் சத்யா என்ற கேரக்டரில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் தன் குடும்பத்துடன் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அப்போது அரசியல்வாதிகளால் அவருடைய குடும்பம் அரசாங்கம் கட்டிக் கொடுக்கும் வீட்டிற்கு இடம் மாறுகிறது.

Also read: சிவகார்த்திகேயனின் மாவீரன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஆனால் தரம் இல்லாமல் இருக்கும் அந்த குடியிருப்பு பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கிறது. அப்போது சிவகார்த்திகேயனுக்கு ஒரு குரல் கேட்கிறது. அது கோழையாக இருந்த சிவகார்த்திகேயனை மாவீரனாக மாற்றுகிறது. இப்படி மக்களுக்காக உரிமை குரல் கொடுக்கும் மாவீரன் ஜெயித்தாரா, இல்லையா என்பதுதான் இப்படத்தின் முழு கதை.

வழக்கம் போல சிவகார்த்திகேயன் அப்பாவியாகவும், மாவீரனாகவும் நடிப்பில் கைதேர்ந்துள்ளார். தனக்கு மட்டுமே கேட்கும் அந்த குரலோடு போராடும் அவருடைய நிலை சரவெடியாக இருக்கிறது. இப்படி முதல் பாதி முழுவதும் விறுவிறுப்பாகவும், சிரிப்பு பட்டாசாகவும் நகர்கிறது. இவருக்கு அடுத்தபடியாக யோகி பாபுவின் கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கிறது.

Also read: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாரு.. மாவீரன் படத்தால் நொந்து போன இயக்குனர்

அதைத்தொடர்ந்து அரசியல்வாதியாக வரும் மிஷ்கின் வில்லத்தனத்திலும் காமெடி கலந்து ரசிக்க வைக்கிறார். இனிமேல் தான் ஒரு இயக்குனர் என்பதை மறந்து விட்டு அடுத்தடுத்து வில்லன் ரோலில் இவர் கலக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மேலும் கதாநாயகியான அதிதி சங்கர், அம்மாவாக வரும் சரிதா ஆகியோர் தங்களுக்கான வேலையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்திருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு விஜய் சேதுபதியின் பின்னணி குரல் பக்காவாக பொருந்தி போகிறது. ஒரு விதத்தில் கதைக்கான சுவாரசியத்தையும் கூட்டி இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் இன்றைய அரசியலை கொஞ்சம் காமெடியும் ஃபேண்டஸியும் கலந்து கொடுத்திருப்பது ரசிக்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை சில இடங்களில் சறுக்கினாலும் மொத்தத்தில் இந்த மாவீரன் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய வீரன் தான்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3.5/5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்