வீட்டு பணி பெண்ணை சித்ரவதை செய்த திமுக எம் எல் ஏவின் மகன், மருமகள்.. ஸ்டாலினுக்கு பா.ரஞ்சித் வைத்த கோரிக்கை

DMK MLA Karunanidhi: வலியவர்களால் எளியோர்கள் ஒடுக்கப்பட்டு கொண்டு இருப்பது எல்லா இடங்களிலும் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அநீதி. அப்படி ஒரு சம்பவம் சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடந்திருப்பது நேற்றைய தினம் வெளியில் தெரிந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் கண்ணீருடன் பேசும் அந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு நிமிடம் மனிதநேயம் என்பது மக்களிடையே மறைந்து போய்விட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

திமுக கட்சியை சேர்ந்த பல்லாவரம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ தான் கருணாநிதி, இவருடைய மகன் ஆன்டோ மருமகள் மெர்லினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண்ணின் வீடியோ தான் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தை வெட்ட வெளிச்சமாக்கியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான்.

ஆன்டோ, மெர்லின் தம்பதியர் வீட்டில் ரேகா என்னும் இளம் பெண் வீட்டு வேலைக்காக சேர்ந்திருக்கிறார். 18 வயது நிரம்பாத அந்த பெண் வீட்டு வேலை செய்ய முடியவில்லை எனக்கு செட்டாகவில்லை நான் வேலையை விட்டு நின்று கொள்கிறேன் என சேர்ந்த இரண்டு நாளில் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த தம்பதியினர் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைக்காமல், நீ இங்கிருந்து வேலை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி துன்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

மெர்லின் அந்த இளம் பெண்ணை உடலளவில் ரொம்பவே துன்புறுத்தி இருக்கிறார். கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து அடிப்பது, மிளகாய் தூள் தண்ணீரில் கரைத்து குடிக்க வைப்பது, சூடு வைப்பது என ஒரு மன நோயாளி போல் அந்த பெண்ணை தாக்கி இருக்கிறார். அந்தப் பெண் உடலளவில் காயப்பட்டு கொண்டிருப்பதை தெரிந்தும் அவருடைய கணவர் ஆன்டோ அதை கண்டு கொள்ளவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

பா.ரஞ்சித் வைத்த கோரிக்கை

ரேகா தற்போது அந்த வீட்டை விட்டு வெளியேறி தனக்கு நிகழ்ந்த அத்தனை அநீதிகளையும் மீடியாவுக்கு முன்பு தைரியமாக சொல்லிவிட்டார். இதைத்தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் இப்போது இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இயக்குனர் பா. ரஞ்சித் தன்னுடைய பதிவில், ரேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியும், நிவாரணமும் கிடைத்தாக வேண்டும். தமிழக அரசு எந்த பாரம்பட்சமும் இன்றி இந்த வழக்கில் நீதி கொடுக்க வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.

இந்த விஷயம் பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கும் நேரத்தில் ஆன்டோ மற்றும் மெர்லின் தம்பதி மீது பல்லாவரம் போலீசார் வழக்கு விசாரணை பதிவிட்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சி எம் எல் ஏ வின் மகன் மற்றும் மருமகள் என்பதால் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா அல்லது ஒரு சில தினங்களில் இந்த விஷயம் கிணற்றில் போட்ட கல்போல் ஆகிவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்