ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வித்தியாசமான டைட்டிலுடன் சர்ச்சையை கிளப்பிய நயன்தாராவின் 75வது படம்.. பஞ்சாயத்தை கூட்டிய வீடியோ

Nayanthara 75th Movie: நடிகை நயன்தாரா ஆசைப்பட்டபடி ஜவான் பட ரிலீஸ் க்கு பிறகு பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றன. அதற்காக பாலிவுட்டே கதி என கிடக்காமல் வந்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் கல்லா கட்ட முடிவெடுத்து இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் இனி அடுத்தடுத்து வரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார் போல.

ஜவான் படத்தின் பெரிய ஹிட்டுக்கு பிறகு நயன்தாராவின் ஹிட் பட ஹீரோவான ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் ரிலீசானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. நயன்தாரா அடுத்து யூடியூபர் இயக்கத்தில் மண்ணாங்கட்டி என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதைப் போன்று சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மினுடன் இணைந்து டெஸ்ட் என்னும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில் நயன்தாராவின் 75 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ விஜயதசமி தினத்தன்று வெளியாகி இருக்கிறது. நயன்தாரா தன்னுடைய 75 ஆவது படமாக தமிழ் சினிமாவில் தான் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நீலேஷ் குமார் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் வீடியோவை பார்க்கும் பொழுது நயன்தாரா மீண்டும் ஒரு சுட்டி பெண் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

இந்தப் படத்திற்கு அன்னபூரணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் முதலில் கோவில் கோபுரம் காட்டப்படுகிறது. பின்னர் ஒரு வீட்டில் எல்லோரும் சாமி கும்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது நயன்தாரா தன்னுடைய அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். பிசினஸ் படிக்கும் மாணவியாக பாவாடை தாவணியுடன் அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புத்தகத்தில் உள்ளே வீட்டிற்கு தெரியாமல் அசைவம் சாப்பிடுவது எப்படி என்ற புத்தகம் இருக்கிறது.

அந்த புத்தகத்தில் இருக்கும் சிக்கன் லெக் பீஸ் புகைப்படத்தை நயன், ஆசையாக பார்த்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய அம்மா வந்ததும் அந்த புத்தகத்தை மறைக்கிறார். அசைவமே சாப்பிடாத ஆன்மீகத்தை சார்ந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு சுட்டி பெண்ணின் கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ அதே அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது.

ஆன்மீக குடும்பத்தைச் சார்ந்த பெண் அசைவம் சாப்பிட ஆசைப்படுவது போல் காட்டி இருப்பதற்கு ஒரு சிலர் பஞ்சாயத்து பண்ணி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இப்போது என்று இல்லை இது போன்று காட்சிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் அதிகமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நயன்தாராவின் ரசிகர்கள் கோலமாவு கோகிலா, யாரடி நீ மோகினி , போன்ற படங்களில் பார்த்த நயன்தாராவை மீண்டும் இந்த படத்தில் பார்க்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News