அந்த மாதிரி படங்களால் நல்ல கதைகளுக்கு வாய்ப்பு இல்ல.. ஆரோகத்தியாகும் இயக்குனர்கள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீமேக் படங்கள் வருவது அதிகமாக இருக்கிறது. அதிலும் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வதற்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான விசித்திரன், கூகுள் குட்டப்பா, நெஞ்சுக்கு நீதி, ஹாஸ்டல் போன்ற பல திரைப்படங்களும் ரீமேக் படங்கள்தான். இவற்றில் நெஞ்சுக்கு நீதி, விசித்திரன் போன்ற சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் பாராட்டை பெற்று நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

ஆனால் அப்படி ரீமேக்காகும் பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர தவறி வருகிறது. இருந்தாலும் ரீமேக் படங்களை இயக்கும் ஆர்வம் இயக்குநர்களுக்கு குறையவில்லை. ஏனென்றால் நேரடி படங்களை காட்டிலும் ரீமேக் படங்களை இயக்குவதில் சில லாபமும் இருக்கிறது.

இயக்குனர்கள் கதைக்காக மாதக்கணக்கில் நேரம் செலவிட தேவையில்லை. அதனால் நேரமும், உழைப்பும் பாதியாகக் குறைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குறுகிய காலத்தில் இந்த படங்களை எடுத்து விட முடியும். அதனால்தான் பலரும் ரீமேக் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் திரைக்கதையை எடுக்கும்போது அதில் எவ்வளவு விறுவிறுப்பு இருந்தாலும் படம் வெளியாகி ரசிகர்கள் கொடுக்கும் விமர்சனம் மற்றும் ஆதரவை பொறுத்து அது வெற்றிப்படமா என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இதுவே ஒரு வெற்றி பெற்ற படத்தை ரீமேக் செய்யும் போது எப்படியும் அது ரசிகர்களை கவர்ந்து விடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.

இதன் காரணமாகவும் அவர்கள் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகின்றனர். ஆனாலும் முன்னணி நடிகர்கள் பலரும் ரீமேக் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் அவர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையான கதைகளைத்தான் அவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் விரைவில் ரீமேக் படங்களின் மீதான மோகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -