மூச்சை நிறுத்திய கலியுக கர்ணன் கேப்டன்.. இறுதி ஊர்வலம் அடக்கம் செய்யப் போவது இங்குதான்

Vijayakanth: நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பற்றி அவ்வப்போது தவறான செய்திகள் வெளியாவது உண்டு. இன்று காலை வெளியான செய்தி அப்படி ஒன்றாகத்தான் இருக்கும் என மனதை தேற்றிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இது ஒரு பேரிடியாக விழுந்திருக்கிறது. கருப்பு வைரம், சொக்கத்தங்கம், கலியுக கர்ணன் என அழைக்கப்பட்ட விஜயகாந்த் தன்னுடைய கடைசி மூச்சை நிறுத்தி இருக்கிறார்.

இந்த வருடத்தின் இறுதியில் இப்படி ஒரு செய்தியை கேட்போம் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். என்றாவது ஒரு நாள் கேப்டன் மீண்டு விடுவார், அவர் தமிழகத்தை ஆளாவிட்டாலும், ஆயுசோடு இருந்தால் போதும் என அவருடைய தொண்டர்கள் நினைத்தார்கள். ஆனால் கேப்டன் தன்னுடைய 71 வது வயதில் மரணத்தை தழுவியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்த் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக பிரபல தனியார் மருத்துவமனை தெரிவித்தது. அதிலிருந்து இரண்டு நாட்களில் அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Also Read:சரிந்தது இமயம்.. விஜயகாந்த் காலமானார், மீளா துயரில் திரையுலகம்

இது போன்ற ஒரு சூழ்நிலையில் விஜயகாந்த் நேற்று மாலை மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சை ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என கட்சி அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று காலை கேப்டனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஒரு சில மணி நேரங்களில் கேப்டன் காலமாகிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடம்

விஜயகாந்தின் உடல் தற்போது அவருடைய சாலிகிராமம் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் இருக்கும் அவருடைய கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையில் கேப்டன் விஜயகாந்த் உடல், அவருடைய ஆண்டாள் அழகர் கல்லூரியில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிய அவர் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது எத்தனை மணிக்கு நடைபெறும் என்பது இனிவரும் தகவல்களின் மூலம் தான் தெரியும்.

Also Read:அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேமுதிக கொடி.. விஜயகாந்த் இறப்பிற்கான காரணம், முழு ரிப்போர்ட்

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்