எதிர்பாராமல் நடந்த 5 பிரபலங்களின் மரணம்.. திரையுலகை அதிர வைத்த சௌந்தர்யா

மரணம் என்பது வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் ஒரு சிலரின் மரணம் நமக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே சினிமாவை எடுத்துக்கொண்டால் பல நடிகர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள்.

அதில் சில நடிகரின் மேல் வெறித்தனமாக அன்பு வைத்திருக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் அந்த நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ரசிகர்களை தங்கள் மரணத்தின் மூலம் மீளாத்துயரில் ஆழ்த்தி சென்ற சில பிரபலங்களை பற்றி இங்கு காண்போம்.

புனித் ராஜ்குமார் பிரபல கன்னட நடிகரான இவர் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரின் மீது அளவு கடந்த அன்பு வைத்த பல ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களையெல்லாம் இன்றுவரை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விவேக் தமிழ் ரசிகர்களால் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் தன்னுடைய புரட்சிகரமான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு ஏராளமான விழிப்புணர்வுகளையும் இவர் ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதே இவருடைய ஆசையாக இருந்தது.

ஆனால் அவருடைய ஆசை நிறைவேறுவதற்கு முன்பே கடந்த வருடம் இவர் திடீரென மரணம் அடைந்தார். அவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது வரை அவரை நினைத்து ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

ரகுவரன் தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன் நடிகர்கள் இருந்தாலும் இவருடைய வில்லத்தனத்தை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. அந்த வகையில் இவர் பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார். அதில் பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக நடித்திருந்த இவருடைய நடிப்பு இன்றுவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த ரகுவரன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2008 ம் ஆண்டு மரணமடைந்தார்.

சௌந்தர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கியிருக்கிறார். அவ்வளவு புகழுடன் இருந்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இப்படி ஒரு கொடூர மரணம் அவருக்கு ஏற்பட்டதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே ஸ்தம்பித்தது. தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவரின் மரணம் இன்று வரை திரையுலகிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

சில்க் ஸ்மிதா தன்னுடைய போதை ஏற்றும் கண்களாலும், கவர்ச்சியான நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் சில்க் ஸ்மிதா. ஒரு காலத்தில் இவர் நடனம் இல்லாத திரைப்படங்களே கிடையாது. அவருக்காக காத்திருந்த பல நடிகர்களும் உண்டு. அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருந்த இவர் மன உளைச்சல் காரணமாக கடந்த 1996ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்திய இவருடைய மரணத்திற்கு காதல் தோல்வி, விரக்தி என்று ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் உண்மை காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த வகையில் இவருடைய மரணம் இப்போது வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது.

Next Story

- Advertisement -