சினிமாவை பொறுத்தவரை மறைந்த தலைவர்கள் அல்லது நடிகர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் உருவாவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் சரி இப்போதும் சரி ஏராளமான படங்கள் வெளிவந்தன. அவ்வாறு வந்த படங்களில் பல வெற்றி பெற்றன சில தோல்வி அடைந்தன. வெற்றியும், தோல்வியும் சினிமாவில் சாதாரண ஒன்றுதான்.
இதுபோன்ற பயோபிக் படங்களில் குறிப்பிட்டு கூறவேண்டுமானால் கடந்த 2018ஆம் ஆண்டு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படம் தற்போது வரை சிறந்த படமாக பார்க்கப்பட்டு வருகிறது. வசூலை தாண்டி படம் பல சாதனைகளை புரிந்தது. இப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
இதேபோன்று தலைவி படமும் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட படக்குழுவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தான் தலைவி. மறைந்த முதல்வர் மற்றும் நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக எடுக்கப்பட்ட தலைவி படம் உண்மையில் அப்படி இல்லை என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.
சினிமாவிற்காக பல கற்பனைகளை கலந்து படத்தின் உண்மைத்தன்மையை குறைத்து விட்டதே படம் தோல்வி அடைய காரணம் என கூறுகிறார்கள். மேலும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் வெளியீடு இல்லை, முக்கியமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஹிந்தி வெளியீடு இல்லை ஆகிய சிக்கல்களுடன் மூன்று மொழிகளில் வெளியான தலைவி படம் மோசமான வசூலையே பெற்றுள்ளது.
50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தலைவி படத்தின் முதல் நாள் வசூல் வெறும் 1.2 கோடி தானாம். இரண்டாம் நாள் 1.6 கோடி வசூலானதாக கூறுகின்றனர். மூன்றாவது நாள் 2 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதுதவிர இன்று முதல் வேலை நாட்கள் என்பதால் வசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல் ஹிந்தியில் இரண்டு வாரங்களில் ஓடிடி ரிலீஸ், தமிழில் நான்கு வாரங்களில் ஓடிடி ரிலீஸ் என்பதால் படத்தை பொறுமையாக ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதை தவிர்ப்பதாகவும் கூறுகின்றனர்.