வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சாய் பல்லவியின் கார்கி ரசிகர்களை கவர்ந்ததா? கார்கி விமர்சனம்

சமீபகாலமாக திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வருவது அதிகமாகி விட்டது. அந்த வகையில் தற்போது சாய்பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் கார்கி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கதையின் நாயகியாக சாய்பல்லவி நடித்திருக்கும் இந்த திரைப்படம் சமூகத்திற்கான ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு அழுத்தமான கதையை துணிச்சலுடன் கொடுத்திருக்கும் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். தற்போது பலரையும் கவர்ந்திருக்கும் கார்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.

கதைப்படி சாய்பல்லவி பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்பப் பெண்ணாக இருக்கும் இவருக்கு தன் அப்பாவின் மீது அதிக பாசம். ஒரு அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் சாய் பல்லவியின் தந்தை ஒரு வழக்கில் கைது செய்யப்படுகிறார்.

அதாவது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் 9 வயது பெண் வன்கொடுமைக்கு ஆளாகிறார். அந்த விசாரணையில் போலீசார் நான்கு பேரை கைது செய்கிறார்கள். அவர்களுடன் ஐந்தாவது நபராக சாய்பல்லவியின் அப்பாவும் கைது செய்யப்படுகிறார்.

தன் அப்பாவை காப்பாற்ற எதையும் செய்யத் துணியும் சாய் பல்லவி தைரியமாக களத்தில் இறங்குகிறார். ஆனால் இந்த வழக்கில் அவருக்கு உதவி செய்ய எந்த வழக்கறிஞர்களும் முன்வரவில்லை. இறுதியில் திக்குவாய் வக்கீலாக இருக்கும் காளி வெங்கட் இந்த வழக்கை எடுத்து நடத்த முன்வருகிறார்.

அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை. தமிழ் சினிமாவில் சோசியல் மெசேஜ் சொல்லும் படங்களை நாம் நிறைய பார்த்திருப்போம். ஆனால் இப்படி கூட ஒரு மெசேஜை சொல்ல முடியும் என்று இயக்குனர் நிரூபித்திருக்கிறார்.

அந்த வகையில் ஆரம்பத்திலிருந்து இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் இதுதான் கிளைமாக்ஸ் என்ற ஒரு கணிப்பில் இருக்கும் போது எதிர்பார்க்காத வகையில் ஒரு கிளைமாக்ஸை வைத்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் இயக்குனர் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் மொத்த கதையுமே மாறி விடுகிறது.

சொல்ல வந்த விஷயத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்த்திருக்கும் இயக்குனருக்கு இந்த படம் நிச்சயம் விருதை பெற்று தரும். அதிலும் சாய்பல்லவிக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த கதாபாத்திரம் அவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்னும் அளவுக்கு அவர் கார்கி என்ற பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு அவர் இதுவரை நடித்த படங்களை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இவருக்கு தேசிய விருது கன்பார்ம். இவருக்கு அடுத்தபடியாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கும் ஒரு கதாபாத்திரம் அந்த திக்குவாய் வக்கீல்.

அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட்டின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அடுத்தது என்ன நடக்கும் என்று பரபரப்புடனே நகர்கிறது. அந்த வகையில் சமூக அவலம், ஆண்களின் சபலம் என பல விஷயங்களை இயக்குனர் பளிச்சென்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ஆக மொத்தம் இந்த கார்கி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு சிறந்த படைப்பு.

- Advertisement -

Trending News