ருத்ர தாண்டவம் இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் உருவான திரைப்படம் திரௌபதி. மக்களின் பலத்த வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து மோகன் ஜி ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இத்திரைப்படத்தில் ரிஷி ரிச்சர்ட், கவுதம் மேனன், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அவரது முந்தைய படத்தை போன்றே இப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தன்னுடைய அடுத்த படத்தில் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். சாணி காகிதம்,பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து மோகன் ஜி இயக்கும் அடுத்த படத்திலும் செல்வராகவன் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய நடிப்பை திரையில் காண ஆவலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

selvaragavan
selvaragavan
Sharing Is Caring:

அதிகம் படித்தவை