விஜய் போலவே வாரி வழங்கும் ராம்சரண்.. ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றி மழை

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி அடைந்தால் அப்படத்திற்கு காரணம் நடிகர், நடிகைகள் மட்டுமல்ல. அதையும் தாண்டி அப்படத்திற்காக வேலை செய்த இயக்குனர்கள், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் உள்ளிட்டவர்கள் தான் முக்கியமான காரணம். தற்போது இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நடிகர்கள் தங்களுடைய சொந்த செலவிலேயே பரிசுகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் தன் திரைப்படத்திற்காக அயராது உழைத்த டெக்னீசியன்களுக்கு பரிசினை வழங்கி உள்ளார்.

ஒரு படத்தின் வெற்றியை தன் நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே கொண்டாடும் நடிகர்கள், தற்போது திரைப்படத்திற்காக வியர்வை சிந்தி உழைத்த டெக்னீசியன்களுக்கு சில பரிசுகளை அன்பாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு,நடிகர் விஜய்,நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி சக்கை போடு போட்டது.

இதனிடையே நடிகர் விஜய் பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, அப்படத்தின் வேலை செய்த 400 நபர்களுக்கு தன் சொந்த செலவில் பிகில் என்ற வாசகம் பொருந்திய இரண்டரை கிராம் தங்க மோதிரத்தை வழங்கி ஊக்குவித்தார். அதுமட்டுமின்றி அந்த படத்தில் நடித்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தன் ஆட்டோகிராஃப் உடன் ஃபுட்பாலை பரிசாக வழங்கினார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தன் திரைப்படத்திற்காக உழைத்தவர்களுக்கு பரிசினை வழங்கி உள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வேலை செய்த சில டெக்னீசியன்களுக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார். இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் வேலை செய்யும் டெக்னீஷியன்களை பரிசுகளை கொடுத்து கௌரவிப்பது போல், தெலுங்கு நடிகர் ராம் சரண் தன் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களை ஊக்குவிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளார்.

பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமௌலியின் கைவண்ணத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண்,ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வி.வி.தனய்யா தயாரிப்பில் உருவான இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸானது. சுமார் 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

இதனிடையே இப்படத்தின் வெற்றி விழாவினை இப்படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராம்சரண் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இப்படத்தில் வேலை செய்த டெக்னீஷியன்கள் அனைவருக்கும் ஆர்.ஆர்.ஆர் என்று பொறிக்கப்பட்ட 10 கிராம் மதிப்புடைய தங்க நாணயத்தை ராம்சரண் வழங்கியுள்ளார். ஏற்கனவே ராம்சரண் தெலுங்கு சினிமாவில் வேலை செய்யும் டெக்னீஷியன்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பல துறையினருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் நிலையில் தங்க நாணயத்தை படத்தில் பணி புரிந்தவர்களுக்கு பரிசளித்தது ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

Next Story

- Advertisement -