ரஜினி நெகட்டிவ் ரோலில் பின்னிய 5 படங்கள்.. பரட்டையாய் ஸ்ரீதேவிக்கு கொடுத்த டார்ச்சர்

பொழுதுபோக்கிற்காக சிறுவயதில் நாடகம் போட்ட ரஜினியின் ஸ்டைல், வேகமான நடை, சுறுசுறுப்பு பிடித்துப்போக அவருடைய நண்பர் அவரை சினிமாவில் நடிக்க தூண்டியதால், அதன் பிறகு இயக்குனர் கே பாலச்சந்தர் பார்வை பட, பிறகு அவருடைய இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரம் கிடைத்ததால், அதில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டினார்.

16 வயதினிலே: பாரதிராஜா இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு கமலஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே திரைப்படத்தில் பரட்டை என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்தப் படத்தின் கதை என்னவென்றால் மயிலை அவமானப்படுத்தி அவளை சீரழிக்கத் துடித்த பரட்டையை பயந்த சுபாவம் உடைய சப்பானி ஆத்திரமடைந்து கொன்றுவிட, அதன்பிறகு சிறைக்கு சென்ற சப்பானிக்காக காத்திருப்பாள் மயில் இந்தப்படத்தில் பரட்டை தான் முக்கிய கதை திருப்புமுனையாக இருந்து படத்தை சூப்பர் டூப்பர் வெற்றிபெற வைத்திருப்பார்.

நெற்றிக்கண்: 1981 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரிதா, லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ரஜினிகாந்த் சக்கரவர்த்தி, சந்தோஷ் என்ற இரட்டை வேடத்தில் தந்தை-மகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் ரஜினி சக்கரவர்த்தியாக தந்தையாக நடித்திருக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் பக்கா பொம்பள பொறுக்கியாகவே தத்ரூபமாக தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். ஆனால் அதற்கு அப்படியே எதிர்மாறாக பொறுப்புணர்வும் பெண்களை மதிக்கும் குணமும் இருக்கும் சந்தோஷ் கதாபாத்திரத்தில் மகனாக  ஒரே சமயத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இந்தப்படத்தில் அவதாரமெடுத்து இருப்பார்.

அவர்கள்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு கமலஹாசன், சுஜாதா நடித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருப்பார். ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்த சுஜாதாவை அவளுடைய காதல் தெரிந்தும் ரஜினிகாந்த் திருமணம் செய்து, அவளை கொடுமைப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தின் கொடுமை தாங்காமல் அவனது உறவை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுக்கும் சுஜாதாவிடம் ரஜினி செய்யும் வில்லத்தனம் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கும். கடைசியில் இந்த படத்தில் சுஜாதா கட்டிய கணவர், மாஜி காதலன், அலுவலகத்தில் ஒருதலையாக காதலிக்கும் நபர் இவர்களோடு யாருடன் சேர்ந்து வாழ்வார் என்பது தான் கதை.

ஆடு புலி ஆட்டம்: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கதாநாயகனாக கமலஹாசன் மற்றும் கதாநாயகியாக ஸ்ரீபிரியாவும் நடித்திருப்பார்கள். இவர்களுக்கு கொடூர வில்லனாக ரஜினிகாந்த் தன்னுடைய சொந்தப் பெயர் ரஜினி என்ற பெயரிலேயே எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், சண்டைக் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும்.

காயத்ரி: 1977 ஆம் ஆண்டு ஆர் பட்டாபிராமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்க,ர் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ரஜினி ஸ்ரீதேவியை ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டு அதன் பிறகு அவளை சந்தேகப் பார்வையில் பின் தொடரும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் ரஜினி தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

இப்படி ரஜினியின் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடித்து அதன்பிறகே தற்போது தன்னுடைய 71 வயதிலும் கதாநாயகனாக தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத நடிகராக மாறி, சினிமாவிற்கு என்று இருந்த இலக்கை உடைத்த இன்றும் பலர் தங்களை ஹீரோவாகக் நினைத்தது ரஜினி போலவே வர  ஆசைப்பட்டு சினிமாவில் நுழைவதற்கு தூண்டுகோலாக இருக்கிறார்.

Next Story

- Advertisement -