காமெடியில் அதகளப்படுத்திய பன்னிக்குட்டி.. யோகி பாபுவுக்கு கை கொடுக்குமா? ட்விட்டர் விமர்சனம்

கிருமி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுச்சரண் முருகையன் தற்போது பன்னிக்குட்டி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

படத்தின் தலைப்பை பார்த்ததுமே அனைவருக்கும் புரிந்திருக்கும் இது பன்னிக்குட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை தான் என்று. ஆம் அதே போன்று இந்த படத்தில் பன்னிக்குட்டி ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இருக்கிறது. பன்னிக்குட்டி குறித்த சில மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் முதல் படத்தை திரில்லர் படமாக கொடுத்துவிட்டு அடுத்த படம் அப்படியே நேர்மாறாக காமெடியில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் படத்தில் கருணாகரன், யோகி பாபு, ராமர் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள்.

படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கருணாகரன் நடித்திருந்தாலும், குறைவான காட்சிகளில் வரும் யோகி பாபு அதிகம் ரசிக்க வைத்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் அவருடைய டைமிங் காமெடி வழக்கம் போல அசத்தலாக இருக்கிறது.

அதிலும் சாமியாராக வரும் திண்டுக்கல் லியோனி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் முழுக்க முழுக்க காமெடியில் அதகளப்படுத்தி இருக்கும் இந்த பன்னிக்குட்டி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. சமீப காலமாக கதையின் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வரும் யோகி பாபுவுக்கும் இந்த திரைப்படம் ஒருவகையில் கை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Next Story

- Advertisement -