உயிர் போனாலும் பரவாயில்லை.. இந்து கடவுளை அவமதித்த கோபத்தால் இயக்குனர் போட்ட ட்விட்

சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மக்களிடையே அது மிக வேகமாக பரவி விடுகிறது. அதில் சினிமாவை பொருத்தவரை நல்ல தரமான திரைப்படங்களை ரசிகர்கள் தூக்கி நிறுத்த தயங்க மாட்டார்கள். அதே போன்று சில சர்ச்சையான விஷயங்களுக்கும் துணிந்து எதிர்ப்பு தருவார்கள்.

அப்படி ஒரு விஷயம் தான் தற்போது நடந்துள்ளது. இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் லீனா மணிமேகலையின் மீது தற்போது ஏகப்பட்ட புகார்களும், எதிர்ப்புகளும் வலு பெற்று வருகிறது. ஏராளமான ஆவண திரைப்படங்களை எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் லீனா மணிமேகலை.

அது மட்டுமல்லாமல் தன் மனதில் பட்டதை தைரியமாக பொதுவெளியில் பேசவும் கூடியவர். அதற்காக இவர் சில பல பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் இயக்கியிருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த போஸ்டரில் இருக்கும் பெண் காளி வேடம் அணிந்து புகை பிடிப்பது போன்று இருக்கிறது. மேலும் அதன் அருகே ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கொடியும் இடம் பெற்றுள்ளது. இதைப் பார்த்த பலரும் லீனா மணிமேகலை இந்து கடவுளை அவமதித்ததாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த ஆவண திரைப்படம் கனடா நாட்டின் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் விதமாக ரிதம் ஆப் கனடா என்ற திருவிழாவில் திரையிடப்பட்டது. இப்படி சர்ச்சையை கிளப்பி இருக்கும் இந்த ஆவண படத்தை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய தூதரகம் கனடா நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இவ்வாறு ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்திருக்கும் இந்த போஸ்டர் விவகாரம் குறித்து தற்போது லீனா மணிமேகலை ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு இனிமேல் இழப்பதற்கு எதுவும் கிடையாது. இருக்கும் வரை எதற்கும் பயப்படாமல் நம்புவதை பேசும் குரலோடு இருந்து விடப் போகிறேன். அதற்கு விலை என்னுடைய உயிர் தான் என்றால் தாராளமாக தரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் இன்னும் அவர் மீது எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற சர்ச்சைகள் எல்லாம் இவருக்கு புதிதல்ல. முன்னதாக இவர் இயக்குனர் சுசி கணேசன் மீது மீ டூ புகார் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -