திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா மீண்டும் சினிமாவுக்கு வந்தபோது மாஸ் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறி விஜய்யின் மெர்சல் படத்தை நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஹவ் ஓல்ட் ஆர் யூ? என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் தான் ஜோதிகா. அந்த படம் ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்த ஜோதிகா பெரும்பாலும் மாஸ் நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
அது குறித்து கேட்டதற்கு மாஸ் படங்களில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை எனவும், இனிமேல் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகளில் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது தன்னை விட இரண்டு வயது குறைவான பிரபாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சலார் என்ற படத்தில் அவருக்கு சகோதரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி திரைப்படத்திலும் அவர் சகோதரியாக நடித்திருந்தார். கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் சலார் என்ற மாஸ் படத்தில் எப்படி ஜோதிகா நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஜோதிகா நடிக்க ஓகே சொன்னால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.