சன் டிவி போல் இடியாப்ப சிக்கலில் விஜய் டிவி.. கடும் எதிர்ப்பில் பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் ஆசிரியரால் பாதிக்கப்படும் அந்த மாணவி தன் தோழிகளிடம் இது குறித்து பேசுகிறார். மேலும் தன் பெற்றோர்களிடம் இதை பற்றி கூறினால் நம்ப மாட்டார்கள் என்று கூறி அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.

இது போன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் மற்றவர்களுக்கு இது ஒரு தவறான முன் மாதிரி ஆகிவிடும் என்று சமூக ஆர்வலர் முகம்மது கோஷ் என்பவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது தற்கொலை செய்து கொள்வது தவறு, தற்கொலை என்பது எதற்கும் தீர்வு கிடையாது. மாணவர்கள் பாலியல் தொல்லை தொடர்பான விஷயங்களை தங்கள் பெற்றோர்களிடம் தைரியமாக பகிர வேண்டும். மேலும் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும். இதை தமிழக அரசு, மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அறிவுறுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தொலைக்காட்சி சீரியல்களில் இது போன்று தற்கொலை செய்து கொள்ளும் படியான காட்சிகளை காட்டுவது மிகவும் பிற்போக்குத் தன்மையாக இருக்கிறது. நல்ல விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு மீடியாக்களுக்கு கட்டாயம் உண்டு.

ஆனால் அவர்கள் அதை செய்யாமல் தேவையில்லாத இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. அவர்கள் கொஞ்சமும் சமூக அக்கறை இல்லாமல் இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இது ஒரு நாளோடு முடியும் விஷயமல்ல, இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது, அந்தக் காட்சிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று புகார் அளித்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில், ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்வது போன்ற ஒரு காட்சி ஒளிபரப்பானது. இந்த காட்சி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சன் டிவிக்கு அபராதம் விதித்து, சம்பந்தப்பட்ட சீரியல் இயக்குனரையும் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தியது. அதன் பின் ஒரு வாரம் சீரியல் ஆரம்பிக்கும் முன்னர் அதன் இயக்குனர் திருமுருகன் பொதுமக்களிடம் அந்த காட்சியை விழிப்புணர்வுக்காக எடுத்ததாகவும், உங்களை பாதித்திருந்தால் மன்னிக்கவும் என்று கூறினார்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் தொடர்பாக எழுந்துள்ள இந்த புகார் மனுவுக்கு விஜய் டிவி மற்றும் சீரியல் நிர்வாகம் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கு பிறகாவது சின்னத்திரை சீரியல்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும்.

Next Story

- Advertisement -