சமூக அநீதியை கையிலெடுத்த பாக்கியா.. விழிப்புணர்வை ஏற்படுத்திய சீரியல்

விஜய் டிவியில் விறு விறுப்புடனும், சுவாரசியத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சமூக அநீதி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை சித்தரித்துள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, அனைத்து இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் நிர்வாகத்தில் இருக்கும் ஒரு சில ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலமும் நம் சமூகத்தில் நடக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் ஒரு மாணவி இந்த பிரச்சனையின் காரணமாக மரணமடைந்தார். அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் சென்னை, மாங்காடு பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தூக்கில் தொங்கினார்.

இது பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் இந்த குற்றங்களுக்கு எதிராக அனைவரும் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை தான் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பி வருகிறது.

அதாவது பாக்கியாவின் மகள் இனியா படிக்கும் பள்ளியில் அவருடைய தோழி நிகிலா சக ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிகிலா தூக்கிட்டு கொள்கிறார். பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இதை அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட அந்த மாணவி பரீட்சைக்கு பயந்து இதுபோன்ற முடிவு எடுத்துள்ளதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கிறது.

இதைக்கண்டு கோபமாகும் பாக்கியா, பத்திரிக்கையாளர்களிடம் பள்ளி நிர்வாகம் பொய் சொல்லுகிறது என்றும், உண்மையில் நிகிலாவுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் தைரியமாக கூறுகிறார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை சீரியல்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்