சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குடித்தே சாவை தேடிக்கொண்ட 9 திரை பிரபலங்கள்.. ஒரு கோடி செலவு செய்து உயிர் தப்பிய ரஜினி

Actor Rajini: தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்று ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்திய பிரபலங்கள் சிலர் பயங்கரமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர். இதை அவர்களால் விட முடியாததால் அந்த குடியே அவர்களது உயிரை பறித்து விட்டது. அப்படி குடித்தே சாவை தேடிக்கொண்ட 9 பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.

என். எஸ். கிருஷ்ணன்: நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட என்.எஸ். கிருஷ்ணன் 40, 50-களில் முன்னணி நகைச்சுவை நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தவர். இவர் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் சீர்திருத்த கருத்துக்களையும் தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் குரல் கொடுத்தார்.

அந்த சமயத்தில் புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதர் உடன் லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும் 30 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். இந்த வழக்கிற்காகவே அவருடைய பெரும்பாலான சொத்துக்கள் கரைந்தது மட்டுமல்லாமல் அவருடைய பேரும் புகழும் பறிபோனது. இதனால் விரத்தி அடைந்த என்.எஸ்.கே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, உடல்நலம் மோசம் அடைந்து, தனது 49 ஆவது வயதிலேயே மரணம் அடைந்தார்.

Also Read: நண்பர்களை மதிக்காத நாகேஷ்.. எல்லாம் பார்த்தாச்சு என விடாப்பிடியாய் வீழ்ந்த சோகம்

நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை: நாதஸ்வர சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் கம்பீரமாக இருந்த டி.என். ராஜரத்தினம் பிள்ளை கர்நாடக இசை நாதஸ்வர கலைஞராக மட்டுமல்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 40 மற்றும் 50-களில் புகழின் உச்சத்தில் இருந்த இவருக்கு 5 மனைவிகள், ஆனால் குழந்தைகளே இல்லை. இவரும் பயங்கர மதுப்பழக்கம் உடையவர். அதுவும் ஒரே நேரத்தில் 12-க்கு மேற்பட்ட பாட்டில்களை குடிக்கும் திறமை கொண்டவர். இதனால் இவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு மாரடைப்பால் காலமானார்

சாவித்திரி: 50களில் தென்னிந்திய நடிகையாக சுமார் 318 படங்களுக்கு மேல் நடித்து ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த நடிகை திலகம் சாவித்திரி, ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். ஆனால் அவரைச் சுற்றி இருப்பவர்களே துரோகம் செய்ததால் தன்னுடைய சொத்து சுகத்தை எல்லாம் இழந்தார்.

அது மட்டுமல்ல ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் நடிகர் ஜெமினி கணேசனை பல எதிர்ப்புகள் மத்தியில் திருமணம் செய்து கொண்ட சாவித்திரிக்கு கடைசியில், அவரும் இறுதிவரை துணை நிற்காமல் போய்விட்டார். இதனால் மன ஆறுதலுக்காக குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாவித்திரி, அந்தக் குடியால் 19 மாதங்கள் கோமா நிலைக்கு சென்று, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் மரணம் அடைந்தார்.

Also Read: நடிப்புக்கு முன் நாகேஷ் கஷ்டப்பட்டு செய்த 5 வேலைகள்.. பின் எம்ஜிஆர், சிவாஜிக்கு தண்ணி காட்டிய கலைஞன்

நாகேஷ்: சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்தான் நாகேஷ். இவருடைய நடன ஸ்டைல் மற்றும் காமெடி அனைத்துமே இவரை தனித்துவப் படுத்தியது. இதனால் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரிசை கட்டி நின்றது. எப்போதுமே நாகேஷ் ஷூட்டிங் முடித்து வந்தவுடன் மது குடித்துவிட்டு ஜாலியாக இருப்பதை விரும்புவார். கை நீட்டும் தூரத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் பட்சத்தில் அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்துவிட்டு அவரது வாழ்நாளின் நாட்களை குறைத்துக் கொண்டே வந்தார்.

அவருடைய நெருங்கிய நண்பர்கள் எல்லாம் எவ்வளவோ அறிவுரை சொன்னாலும் அதற்கெல்லாம் செவிமடுக்காத நாகேஷ், ‘நான் ஜாலிமேன் இந்த வாழ்க்கையை ஜாலியாக வாழ பிறந்தவன்’ என்று கூறி தொடர்ந்து குடித்து குடித்து இறுதியில் அந்த குடியால் அவரின் வாழ்க்கையை தொலைத்து விட்டார். இன்றும் நாகேஷிடம் நெருங்கி பழகியவர்களிடம் கேட்கும்போது பழகுவதற்கு மிகவும் நல்லவர். ஆனால் அவரிடம் பிடிக்காத ஒரே விஷயம் குடிப்பழக்கம் தான். என்று அதை மட்டும் குறி வைத்து குறை சொல்வார்கள்.

Also Read: நடிப்பை தாண்டி தியேட்டர் கட்டி லாபம் சம்பாதிக்கும் 4 பிரபலங்கள்.. பெரிய மால் ஆகிய சிவாஜியின் தியேட்டர்

சுருளி ராஜன்: 70களில் ஒரு நாளைக்கு 50,000 வரை சம்பளம் வாங்கி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சுருளி ராஜன். ஒரே நேரத்தில் 7 படங்களில் நடித்துள்ளார். ஒரு இயக்குனருக்கு 3 மணி நேரம் மட்டுமே கால்சீட் கொடுப்பாராம். அந்த அளவிற்கு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சுருளி ராஜன் பயங்கர மது பிரியர். இவரிடம் யாரோ ஒருவர் இளநீரில் ஜின் மதுவை ஊற்றி குடித்தால் போதை ஜிவ்வுனு ஏறும் என உசுப்பேற்றி விட்டனர். அதை அப்படியே செய்த சுருளி ராஜனின் கல்லீரல் பாதிப்படைந்து, உடம்பில் சுகரும் ஏறிவிட்டது மோசமான நிலைக்கு சென்றார். இருப்பினும் எம்ஜிஆர் எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என விமானத்தின் மூலம் கூட வெளிநாட்டு மருத்துவர்களை எல்லாம் வரவழைத்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

ஊர்வசி சகோதரி கல்பனா: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் காமெடி நடிகையாகவும் கலக்கியவர் தான் ஊர்வசியின் சகோதரி கல்பனா. இவர் 70-களின் பிற்பகுதியில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை துவங்கி, அதன் பிறகு 80களில் முன்னணி நகைச்சுவை நடிகையாக ரவுண்ட் கட்டினார். அதிலும் 1985 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான சின்ன வீடு என்ற படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதில் மட்டுமல்ல சதிலீலாவதி, காளி வீடு போன்ற படங்களில் அவரது நடிப்பு மறக்க முடியாதது.

மேலும் கமல் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்பந்தம் என்ற படத்தில் செவிலியர் மரியக்குட்டி என்று கேரக்டரில் டாக்டராக நடித்திருக்கும் சிம்ரன் உடன் நர்சாக என்ட்ரி கொடுத்த கல்பனா, படத்தைப் பார்ப்பவரை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார். கடைசியாக கல்பனா கார்த்தி நடிப்பில் வெளியான தோழா என்ற படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றார். அவருக்கு ஏற்கனவே மதுப்பழக்கம் இருப்பதால் அன்று இரவு குடித்துவிட்டு தனது ஹோட்டல் அறையில் சுயநினைவின்றி காணப்பட்டார். உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.

இவர்கள் மட்டுமல்ல 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக இருந்த டி. எஸ். பாலையா, நடிகர் சந்திரபாபு, கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோரும் குடித்தே தங்களது சாவை தேடிக் கொண்டனர். இவர்களை எல்லாம் பார்த்த பிறகு தான் ரஜினிக்கு ஒரு ஞான உதயம் வந்தது. நான் நன்றாக குடிப்பேன் என உண்மையை ஒத்துக் கொண்ட ரஜினி தன்னுடைய ரசிகர்களிடமும் குடிப்பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என கேட்டுக் கொண்டார். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக மாமிசம், புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தையும் தவிர்த்து விட்டார். அதுமட்டுமல்ல ரஜினி ஒரு கோடி வரை செலவு செய்து வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று தன்னுடைய உடம்பை சரி செய்து விட்டார். இல்லையென்றால் இவரும் இந்த லிஸ்டில் வந்திருப்பார்.

- Advertisement -

Trending News