உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட 7 படங்கள்.. வரதராஜ முதலியாராகவே மாறிய நாயகன் கமல்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து சுவாரசியமான சினிமா கட்டுரைகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் உண்மை நிகழ்வுகளில் இருந்து உருவாக்கப்பட்ட தமிழ் படங்கள் என்ற ஒரு லிஸ்டை பார்க்கலாம். இந்த லிஸ்டில் உள்ள திரைப்படங்கள் அனைத்தும் உண்மையாக நடந்த கதைகளில் இருந்து உருவாக்கம் பெற்றவை.

நாயகன்: நாயகன், என்னும் வித்தியாசமான திரைப்படத்தை மணிரத்னமும், கமல்ஹாசனும் நமக்கு கொடுத்தனர். மும்பையை கலக்கிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தோள் கொடுத்தவர்கள் பிசி.ஸ்ரீராம் மற்றும், இசையமைப்பாளர் இளையராஜா. பல பத்திரிகையாளர்களால் பாராட்டப்பட்ட இந்த திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி 175 நாட்கள் கடந்து வெற்றிபெற்றது. முதலில் இந்த படத்திற்க்கு சான்றிதழ் தர சென்சார் அமைப்பு மறுத்துவிட்டது. பின்னர் வரதராஜ முதலியாரின் அனுமதி பெற்ற கடிதத்தில், இப்படம் அவரது வாழ்க்கை வரலாறு அல்ல என்று உறுதி அளித்தபின் இந்த படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

பம்பாய்: மணிரத்னம் நிஜ கதைகளை சிறப்பான திரைக்கதை மூலம் படமாக உருவாக்கி, அதனை நமக்கு ஆச்சரியப்படும் வகையில் கொடுப்பதில் வல்லவர். அந்த வகையில் 90களில் பம்பாய் நகரில் நடந்த மதக்கலவரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் பம்பாய். இந்த படத்தில் மும்பையில் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஜோடி படும் பாட்டை அற்புதமாக படம் பிடித்திருந்தார் இயக்குனர். இந்த படம் மூல நல்லதொரு கருத்தையும் அவர் கூறியிருந்த காரணத்தால் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு இசை, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

காதல்: சாமானிய மக்களின் வாழ்க்கையை திறம்பட படம் பிடிப்பதில் வல்லவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கிய முதல் திரைப்படமான காதலில் பரத், சந்தியா நடித்திருந்தார்கள். மதுரையில் மெக்கானிக்காக வேலைபார்க்கும் பரத், பள்ளி செல்லும் சந்தியா மீது காதல் கொண்டு, அவருடன் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். அதன் பிறகு அவரது குடும்பம் சமாதானம் பேசி அழைத்துக்கொண்டு போக, மீதி கதையை வலி நிறைந்து சொல்லி இருந்தார் இயக்குனர். இந்த படம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பரத் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பரதேசி: பரதேசி திரைப்படம் ரெட் டீ என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த நாவல் வெள்ளைக்காரன் காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்த இந்தியர்கள் பற்றிய கதை. ஒரு முறை அந்த தேயிலை தோட்டத்திற்குள் வேளைக்கு சென்றவர்கள் மீண்டு வருவது இல்லை என்பதை வலியுடன் கூறியிருந்தார் இயக்குனர் பாலா. இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். முதன்மை கதாபாத்திரங்களில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

கல்லூரி: ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக கோர்ட் தண்டனை கொடுத்தபோது, அதனை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. அப்போது பேருந்து ஒன்று கல்லூரி பெண்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டது. அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலாஜி சக்திவேல் எடுத்த திரைப்படம் கல்லூரி. இந்த படத்திற்கும் அந்த நிகழ்வுக்கும் நேரடி தொடர்பு இல்லாத போதும், படம் பேசும் உண்மை அந்த நிகழ்வே. இந்த படத்தில் புதுமுகங்கள் பலருடன் தமன்னா நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை நடிகர் பரணி இந்த படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்: நகைச்சுவையான உண்மை சம்பவங்களையும் படமாக எடுக்கலாம் என்று புரியவைத்து படம் இது. கதைப்படி நாயகனுக்கு தலையில் அடிபட்டு, சில வருட நினைவுகளை இழக்கிறார். அடுத்தநாள் அவருக்கு திருமணம். காதலித்த மணப்பெண்ணை அவருக்கு யார் என்றே தெரியவில்லை. இந்த நிலைமையை சமாளித்து அவரது நண்பர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் வித்தியாசமான கதையை கொடுத்திருந்தார் பாலாஜி தரணீதரன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருந்தனர்.

விசாரணை: வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்திருந்த திரைப்படம் விசாரணை. இந்த படம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ காரர்களை பற்றியது. தமிழக போலீஸ் விசாரணை என்னும் பெயரில் செய்யும் கொடுமைகளை கொஞ்சமும் மறைக்காமல் அப்படியே நமக்கு கொடுத்திருந்தார் இயக்குனர். இந்த படத்தில் சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கனத்த நெஞ்சு கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த திரைப்படம் என்பது பின்குறிப்பு.