Technology: அறிவியல் தற்போது எல்லைகளை கடந்து பல முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதில் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டு வருகிறோம்.
அப்படி ஒரு முயற்சியை தான் அமெரிக்காவின் நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான பிரைன் பிரிட்ஜ் செய்துள்ளது.
அதாவது உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் செயலாக்க திட்டம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அதில் ரோபோக்கள் மனித தலையை அசால்ட்டாக இன்னொரு ரோபோவின் உடலில் மாற்றுகின்றன. நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த ஆய்வு நடைமுறையில் ஏற்புடையதா என்ற கேள்வியும் இந்த வீடியோ மூலம் எழுந்துள்ளது.
ஆனால் பிரைன் பிரிட்ஜ் நிறுவனம் தங்களுடைய ஆய்வில் உறுதியாக இருக்கின்றனர். இது நரம்பியல் நோய்கள் மற்றும் நான்காம் கட்ட புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கும் எனவும் கூறுகின்றனர்.
தலை மாற்று அறுவை சிகிச்சை
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மூளை சாவடைந்த ஒருவரின் உடலில் முற்றிய நோயினால் பாதிக்கப்பட்டவரின் தலையை சேர்ப்பது போல் தான்.
நடைமுறைக்கு சாத்தியப்படாத இந்த ஆய்வு தற்போது விவாதம் ஆகவும் மாறி இருக்கிறது. மேலும் பிரைன் பிரிட்ஜ் இந்த அறுவை சிகிச்சையில் ரோபோக்களை வழிநடத்த ஏ ஐ தொழில் நுட்பத்தை புகுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு மட்டும் வெற்றியடைந்து விட்டால் அடுத்த எட்டு ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வந்துவிடும் என்கின்றனர். ஆனால் மிகப்பெரும் சவாலாக இருக்கும் இந்த ஆய்வு பணக்காரர்களுக்கானதாக மட்டுமே இருக்கும் என்ற குரல்களும் சமூக வலைத்தளங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளது.