இப்ப வாயில வயித்துல அடிச்சு என்ன பிரயோஜனம்.. நல்ல சான்ஸை மிஸ் செய்த விக்ரம் பிரபு

சமீபகாலமாக தமிழ் சினிமா ஒரு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி வருகிறது. வித்தியாசமான கதைகளை கொண்டு மக்களை கவரும் படம் எதுவுமே இப்போது தமிழில் வெளி வருவதில்லை. பலகோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக படங்கள் தயார் ஆனாலும் அவை எதுவுமே மக்களை கவரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சமீபத்தில் வெளிவந்த ரைட்டர், வினோதய சித்தம் போன்ற கதை அம்சம் கொண்ட படங்களை இப்போது நம்மால் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் பல படங்கள் தோல்வியடைந்தாலும் எப்படியாவது ஒரு நல்ல திரைப்படத்தில் நடித்து தன்னுடைய பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு.

இவர் பெரிய குடும்பத்தின் வாரிசாக இருந்தாலும் கும்கி திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களை தவிர சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை.

கடைசியாக இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது. இதனால் அவர் எப்படியாவது தன் திறமையை நிரூபித்து விட வேண்டும் என்ற நோக்கில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த திரைப்படம் டாணாக்காரன் படம்.

தற்போது ஓடிடியில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை பார்த்து அனைவரும் ஆஹா ஓஹோ என்று அவரைப் பாராட்டி வருகின்றனர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தியேட்டரில் வெளியிடாமல் ஓடிடியில் ரிலீஸ் பண்ணி விட்டோமே என்று விக்ரம் பிரபு தலையில் அடித்து வருகிறார். இப்படத்தை ஒருவேளை தியேட்டரில் வெளியிட்டிருந்தால் நிச்சயமாக வசூலில் மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்திருக்கும். இதனால் மிகப்பெரிய தவறு செய்து விட்டோமே என்று விக்ரம் பிரபு தற்போது வருத்தத்தில் இருக்கிறார்.