சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உளவாளி தர்ஷா, முத்து Vs ஜாக்லின்.. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன.? Day 9

Biggboss 8-Day 9: பிக்பாஸ் வீடு நேற்றைய தினம் சண்டை சச்சரவுமாக நகர்ந்தது. ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்வதும் பெண்கள் பதிலுக்கு எதிர்ப்பது இல்லை என்றால் அழுவது என பார்க்கும் நமக்கு முடியல சாமி என டயர்ட் ஆகிவிட்டது.

இதில் சிலரின் விளையாட்டு தந்திரம் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் ஆண்கள் அணி இன்னும் தனித்தன்மையோடு விளையாட ஆரம்பிக்கவில்லை. சரி ஒன்பதாவது நாளான நேற்று பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

காலையிலேயே பஞ்சாயத்தோடு தான் ஆரம்பித்தது. தண்ணீர் இன்சார்ஜ் ஆக இருந்த ரவீந்தர் வெளியேறியதால் அந்த பொறுப்புக்கு ரஞ்சித் வந்தார். தண்ணி பிடிக்க கூட டாஸ்க் செய்யணுமா என கடுப்பான ஜாக்லின் வழக்கம்போல சண்டைக்கு பாய்ந்தார்.

இதுல என்னம்மா உனக்கு ஈகோ இருக்கு என மல்லுக்கட்டி சண்டைக்கு புது ரூட் பிடித்தார் முத்து. பெரும்பாலான நேரங்களில் இவர் சொல்வதை அச்சு பிசகாமல் செய்தது ஆண்கள் அணி. கேப்டன் சத்யாவை கூட இவர் பொருட்டாக மதிக்கவில்லை.

பெண்கள் அணியை கதற விட வேண்டும் என்ற நோக்கத்தோடு களம் இறங்கினார் முத்து. ஆனால் பாவம் பார்த்து சில விஷயங்களை செய்த கேப்டனையும் அவர் விட்டு வைக்கவில்லை. இதனால் தலையைப் பிய்த்துக் கொண்டு திரிந்தார் சத்யா.

அதேபோல் ஆண்கள் டீமுக்கு வந்திருக்கும் தர்ஷா அவர்களை முடிந்த அளவு இம்சை செய்து கொண்டிருந்தார். அடுத்த வாரம் ஆண்கள் அணி மொத்தமாக இவரை நாமினேட் செய்யப்போவது மட்டும் உறுதி.

அந்த அளவுக்கு இவர் பெண்களுக்கு விசுவாசமாக இவர்களை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஆண்கள் அணி எந்த பிளான் செய்தாலும் அதை அப்படியே பெண்கள் அணியிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார்.

இதை தீபக் வந்து எச்சரித்த நிலையில் இம்சை பின்னாடியே வருது. என்ன சொன்னாலும் போக மாட்டேங்குது என ஆண்கள் குறைப்பட்டு கொண்டனர். அதன் பிறகு கிச்சன் ஏரியாவில் ஒரு சண்டை ஆரம்பித்தது. யாரும் இல்லாமல் நாங்கள் எப்படி பர்மிஷன் கேட்பது என ஆரம்பித்தார் ஜாக்குலின்.

ரணகளமாக மாறும் பிக் பாஸ் வீடு

வழக்கம்போல அவரிடம் சண்டை கட்டிய முத்து பெண்கள் அணியை உச்சகட்ட கோபத்திற்கு கொண்டு சென்றார். அதேபோல் சமைப்பதற்கு ஜாக்லின் சுனிதா இருவரையும் ஆண்கள் அணி தேர்ந்தெடுத்தது. அப்பொழுதுதான் இருவரும் முட்டிக்கொள்வார்கள் என்ற யுக்தி.

ஆனால் அதையும் தர்ஷா போட்டுக் கொடுத்து விட்டார். உடனே பெண்கள் போர்க்கொடி தூக்கியதில் சாச்சனாவும் ஒப்புக்கு சப்பானியாக சேர்க்கப்பட்டார். ஆனால் பாத்திரத்தையும் அவர்கள் தான் கழுவ வேண்டும் என சொன்னதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்.

இதை அடுத்து நேற்று நடந்த ஷாப்பிங் டாஸ்க்கில் ஆண்கள் அணி அளவுக்கு மீறி பொருட்களை எடுத்து விட்டனர். இதற்காக அவர்களை ஜாலியாக பழி வாங்கினார் பிக் பாஸ். உடனே சந்தோஷத்தின் உச்சிக்கே சென்ற பெண்கள் அணி அதை கொண்டாடி தீர்த்தது.

அதே சமயம் தர்ஷா நீங்க பண்ண தப்புக்கு நானும் சாப்பிடாமல் கிடக்கவேண்டுமா என சண்டைக்கு ரெடியானார். பத்தல இன்னும் எதிர்பார்க்கிறோம் என பெண்கள் அணி கத்தி கூச்சலிட்டது. ஆண்கள் அணியோ எதுவா இருந்தாலும் தனியா போய் பேசிக்கலாம் என அவரிடம் கோரிக்கை வைத்தது.

அதை ஏற்றுக் கொண்ட தர்ஷா வில்லத்தனமாக சிரித்தபடி சென்றார். இதை கவனித்த ஜெப்ரி அது எப்படி நீ சிரிக்கலாம் என சரியான கேள்வியை முன் வைத்தார். ஆனாலும் அடங்காத தர்ஷா மாற்றி மாற்றி பேசி ஆண்கள் அணியின் வெறுப்புக்கு ஆளானார்.

அதே சமயம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் ஆண்கள் அணி பரிதாபமாக தோற்று தண்டனையை வாங்கி கட்டிக் கொண்டது. அதன்படி பாத்ரூம் கழுவுதல் பாத்திரம் கழுவுதல் வீட்டை சுத்தம் செய்வது என்ற பொறுப்பு அவர்களிடம் வந்தது.

இது ஒரு பக்கம் இருக்க ஜாக்லின் சைலன்ட் ஆக பாத்திரம் கழுவும் ஜெல்லை திருடிக் கொண்டு வந்து விட்டார். இதற்காக அவருக்கு தண்டனை தர வேண்டும் என ஆண்கள் அணியை முடிவு செய்தது. அதன்படி பேசாமல் ஒரு ஓரமாக உட்கார வேண்டும் என கேப்டன் சத்யா கூறினார்.

உடனே வழக்கமான ஆயுதத்தை கையில் எடுத்த ஜாக்லின் கண்ணில் தண்ணி வச்சுக்கிட்டு ஓரமா போய் உட்கார்ந்தார். ஏன் அழுவுறீங்க என கேட்டு வந்த முத்துவை இதைத்தான் எதிர்பார்த்தேன் என கிழித்து தொங்கவிட்டார். இப்படியாக நேற்றைய நிகழ்ச்சி கண்ணை கட்டும் அளவுக்கு கலாட்டாவாக இருந்தது.

- Advertisement -

Trending News