ஹிட் படங்களை காப்பி அடித்த வாரிசு பட போஸ்டர்.. ஒன்னு கூட சொந்தமா யோசிக்கலயா

சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தை பற்றி தான். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் போஸ்டர் இரு தினங்களுக்கு முன் வெளியானது.

அந்த போஸ்டரை காண விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் போஸ்டர் வெளியான பிறகு அதைப் பார்த்த பலருக்கும் ஏமாற்றம்தான் கிடைத்தது. ஏனென்றால் மிகவும் மாஸாக வெளிவரும் என்று எதிர்பார்த்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை.

அந்த வகையில் முதல் போஸ்டரில் விஜய் கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார். ஆனால் அந்த லுக் கபாலி படத்தில் வரும் ரஜினி போன்று இருப்பதாக சோஷியல் மீடியாவில் கூறி வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று விஜய் தன்னுடைய 48வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்.

அதை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது. அதில் இரண்டாவது போஸ்டரில் விஜய் மாட்டு வண்டியில் படுத்திருப்பது போன்று இருந்தது. அந்த போட்டோவும் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போல இருந்ததை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது போஸ்டரும் கேஜிஎப் 2 திரைப்படத்தை போன்று இருந்தது. அதாவது அந்த போஸ்டரில் விஜய் ஒரு பைக்கில் கெத்தாக அமர்ந்திருப்பார். இப்படி ஹிட் திரைப்படங்களின் பாணியில் வெளிவந்திருக்கும் வாரிசு பட போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் அதிக ட்ரோல்களுக்கு ஆளாகி வருகிறது.

மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு போஸ்டர் கூட சொந்தமா யோசிச்சு வைக்க முடியலையா, இப்படி ஹிட் படங்களைப் பார்த்து எதற்காக வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போஸ்டரே இப்படி என்றால் படமும் நிச்சயமாக ஏதாவது ஒரு படத்தின் காப்பியாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

Next Story

- Advertisement -