வலிமை அஜித்துக்காக எழுதிய கதை கிடையாது.. வினோத் ஓபன் டாக்

ஒரு இயக்குனர் கதை எழுதுகிறார் என்றால் அவர் மனதில் ஒரு ஹீரோவை வைத்து தான் அந்த கதையை எழுதுவார். அந்த கதைக்கு எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என்பது ஒரு இயக்குனருக்கு தான் தெரியும். ஆனால் அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் தான் இயக்குனர் வேறு ஹீரோவை தேர்வு செய்வார்.

அந்த வகையில் தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அவருக்காக எழுதப்பட்ட கதை கிடையாதாம். இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் தான் வலிமை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இப்படம் தற்போது முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

அதன்படி போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் மேக்கிங் வீடியோக்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் வினோத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “இது நான் எழுதிய இரண்டாவது கதை. இது வேறொரு ஹீரோவுக்காக எழுதியது. இந்த கதையை முதலில் நான் வேறொரு வடிவத்தில் எழுதியிருந்தேன். அப்போது அது ஒரு போலீஸ் கதையாக இருக்கவில்லை. அதன் பின்னர் அஜித்திற்காக ஒரு சில மாற்றங்களை செய்தேன்.

ஆனால் என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவித சமரசமும் செய்யவில்லை. என்னைப் போன்ற இயக்குனர்கள் ஒரு பெரிய ஸ்டாருடன் பணியாற்றும்போது பார்வையாளர்களுக்காக எடுக்கும் படத்தில் போடும் உழைப்பில் 10 சதவீதத்தை கொடுத்தால் போதும். ஒரு பெரிய நடிகரின் படத்தை ரசிகர்களே கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து விடுவார்கள்” என கூறியுள்ளார்.

வலிமை படத்தின் கதை அஜித்திற்காக எழுதப்பட்டது அல்ல. வேறொரு நடிகருக்காக எழுதப்பட்ட கதையில் அஜித் நடித்துள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்