அடிச்சிக்கவே முடியாத 8 இசையமைப்பாளர்கள்.. இன்று வரை மவுசு குறையாத ஜாம்பவான்கள்

வனக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைதளத்தின் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். இந்த பதிப்பில் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்த இசை அமைப்பாளர்களையும் அவர்களின் முதல் படங்களையும் காணலாம்.

இளையராஜா: இசைஞானி என்று அழைக்கபடும் இளையராஜாவின் முதல் திரைப்படம் அன்னக்கிளி (1976). இந்த படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவிடம் மேஜயில் தாளம் போட சொல்லி கேட்டு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார். மேலும் முதல் முறை ரெக்கார்டிங் போன போது கரெண்ட் கட் நடந்துள்ளது. ஆனபோதும் அவருக்கு வாய்ப்பை மறுக்கவில்லை. இந்த படத்தில் சிவகுமார், சுஜாதா நடித்திருந்தனர். ‘ மச்சான பாத்திகளா…’பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

ஏ ஆர் ரஹ்மான்: திலீப் குமார் என்ற இயற்பெயர் கொண்ட ரஹ்மான், சிறு வயதில் இருந்தே கீபோர்ட் வாசிப்பதில் அலாதி இன்பம் கொண்டவர். அவரது தந்தை இசைக்கலைஞர் என்பதால் அவருக்கு அதில் ஆர்வம் இருந்ததில் வியப்பு இல்லை. லியோ காபி விளம்பரத்திற்கு இசை அமைத்தது மூலமாக நல்ல பெயர் கிடைக்க, அதன் மூலம் மணிரத்னம் அவர்களின் ரோஜா படத்தின் வாய்ப்பை பெற்றார். சின்ன.. சின்ன ஆசை..பாடல் உட்பட அனைத்து பாடல்களும் மிகப்பெரும் ஹிட். முதல் படத்திலேயே தேசிய விருதையும் வென்றார்.

தேவா: 1989 ஆம் வருடத்தில் வெளிவந்த மாட்டுக்கார மன்னாரு படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். அந்த படத்தால் பெரிய அங்கீகாரம் கிடைக்காத போதும், பிரஷாந்த் அறிமுகம் ஆன வைகாசி பொற்தாச்சு படத்தின் மூலம் புகழ் பெற்றார். நிறைய ஆங்கில பாடல்களை அப்பட்டமாக காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது இருக்கிறது. ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா ஆகிய படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

யுவன் சங்கர் ராஜா: இளையராஜாவின் இளையமகன் யுவன் தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே வைதிருக்கார். சரத்குமார், பார்த்திபன், நக்மா நடித்த அரவிந்தன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் யுவன். முதல் படம் முதலே அவர் கவனிக்கப்பட்டார். செல்வராகவன் படங்களுக்கும் அஜித்குமார் படங்களுக்கும் உயரிய இசை கொடுப்பதில் வல்லவர். 50 படங்களை கடந்து இன்றும் யூத்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றால் அது மிகையல்ல.

வித்யாசாகர்: 2000களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் வித்யாசாகர். பல விஜய் படங்களுக்கு சிறப்பான இசையை கொடுத்தவர். 1989 ஆம் ஆண்டு வெளிவந்த பறவைகள் பலவிதம் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். ரன், கில்லி, தில், அன்பே சிவம் என்று தொடர்ந்து பல ஹிட் களை கொடுத்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்.

ஜி வி பிரகாஷ்: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஜி. வி.பிரகாஷ் இளம் வயது இசையமைப்பாளர் என்ற பெருமையுடன் அறிமுகம் ஆனார். அவர் இசை அமைத்த வெயில், ஆடுகளம் போன்ற திரைப்படங்கள் இசைக்காக பெரிதும் பேசப்பட்டன. திரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் ஹீரோ ஆனவர் தொடர்ந்து நடித்தும் வருகிறார், இசை அமைத்தும் வருகிறார்.

சந்தோஷ் நாராயணன்: அட்டகத்தி படம் மூலமாக தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சந்தோஷ் நாராயணன். முதல் படத்திலேயே வித்தியாசமான இசையை கொடுத்த காரணத்தால் சீக்கிரம் நிறைய வாய்ப்புகளை பெற்றார். மெட்ராஸ், குக்கூ, ஜிகர்தண்டா என்று இவர் இசை அமைத்த படங்களும் பெரும் வெற்றி பெற்றது. ரஜினிக்கு கபாலி, காலா, விஜய்க்கு பைரவா என்று வெற்றி நடை தொடர்கிறது.

அனிருத்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உறவினரான, அனிருத் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த 3 படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் மாபெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அனிருத் பல படங்களை தனது திறமையால் காப்பாற்றி வருகிறார் என்றால் கூட அது மிகை அல்ல. சமீபத்தில் சக்கை போடு போட்டு வரும் விக்ரம் படத்திற்கு இவரது இசை முக்கிய காரணம் என்று தாராளமாக கூறலாம்.