பாடல்களை மட்டும் வைத்து ஹிட்டான 7 படங்கள்.. காலத்தால் அழியாத தில்லானா மோகனாம்பாள்

வணக்கம் சினிமாப்பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையை முக்கிய அம்சமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்பட வரிசையை பார்க்கலாம்.

தில்லானா மோகனாம்பாள்: என்றைக்கும் தமிழ் கிளாசிக் படங்களில் நிச்சய இடம் பிடிக்கும் படம் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் பாலையா, நாகேஷ், ஏவிஎம் ராஜன், நம்பியார் உட்பட பலர் நடித்திருந்தனர். நாதஸ்வர வித்வானாக சிவாஜி அவர்களும், நாட்டிய கலைஞராக பத்மினியும் நடித்திருப்பார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் பிறக்கும் காதல் நம்மையும் ரசிக்க வைத்துவிடும். இந்த படத்தில் பாடல்கள், இசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது. கே.வி.மஹாதேவன் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

ராஜபார்வை: கதைப்படி கண் தெரியாத வயலின் வித்வானாக கமல்ஹாசன் நடித்திருந்தார். அவர் மீது காதல் கொள்ளும் நாயகியாக மாதவி நடித்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான போதும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தனது சொந்த முயற்சியில் பல பரிசோதனை திரைப்படங்களை உருவாக்கிய கமல்ஹாசனின் முதல் பரிசோதனை முயற்சி திரைப்படம் ராஜபார்வை. இந்த படம் கமல்ஹாசனின் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. “அந்தி மழை பொழிகிறது…” பாடலை இப்போது கேட்டாலும் மெய்சிலிர்க்கும். மேலும் இந்த படத்தின் பின்னணி இசை பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா.

நிழல்கள்: பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அருமையான திரைப்படம் நிழல்கள். இந்த படத்தில் அறிமுகம் ஆனகாரணத்தால் நிழல்கள் ரவி என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இசை அமைப்பாளர் ஆகவேண்டும் என்ற லட்சிய கதாபாத்திரமான சந்திரசேகருடையது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற “மடை திறந்து… பாடும்…” என்ற பாடல் மாபெரும் ஹிட். பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் தான் மாறிமாறி ஒலித்தது என்றால் அது மிகையல்ல.

சிந்துபைரவி: இளையராஜாவுக்கு தேசிய விருது வாங்கிதந்த மற்றொரு திரைப்படம் சிந்துபைரவி. சிவகுமார், சுலோச்சனா, சுஹாசினி, டெல்லிகணேஷ், உடட்பட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கர்நாடக பாடகராக சிவகுமார் சிறப்பாக நடித்திருந்தார். புதுமைகளை புகுத்தும் கே.பி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் தியாகராஜருடைய கீர்த்தனை ஒன்றை அப்படியே நாட்டுப்புற பாடலுடன் சேர்த்து புதுமை படைத்தார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

டூயட்: கே.பி இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்ரி நடித்திருந்த இந்த படத்தின் இன்னொரு நாயகன் ஏஆர் ரகுமான் என்றால் அது மிகை அல்ல. சாக்ஸபோன் இசைக்கலைஞர் ஆன பிரபு, மீனாட்சியைகாதலிக்கிறார். அவரது தம்பி ரமேஷ் அரவிந்தும் அவரை காதலிக்கிறார். ஆனால் மீனாட்சி யாரை காதலிக்கிறார், அவர்களது காதல் என்னவானது என்பதை இந்த படம் கூறுகிறது. மேடை பாடகர்களான பிரபு, ரமேஷ் அரவிந்த் வருவதால், இந்த படத்தில் இசை முக்கிய கதாபாத்திரம் என்பது சிறப்பு.

முகவரி: அஜித்குமார் நடிப்பில் வெளியான அருமையான இந்த படத்தை துரை இயக்கி இருந்தார். இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு வாழும் நாயகன், அதற்காக வேளைக்கு செல்லாமல் இருக்கிறார். அவரது குடும்பம் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது. தனது லட்சியத்துக்காக காதலை கூட தூக்கி எறியும் நாயகனுக்கு லட்சியம் நிறைவேறியதா என்பதை இந்த படம் கூறுகிறது. நாயகன் இசை அமைப்பாளர் என்பதால் இந்த படம் முழுக்க அருமையான பாடல்களை கொண்டுள்ளது. படத்திற்கு இசை தேவா. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் காப்பி என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இசை: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில், அவரே இசை அமைத்து, சத்யராஜ் வில்லனாக நடித்த படம் இசை. இந்த படத்தின் கதை இசை அமைப்பாளர்கள் இளையராஜா – ரஹ்மான் ஆகியோரது வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறுவார்கள். அதனால் இந்த படத்திற்கு சர்ச்சை கிளம்பியதும் ஞாபகம் இருக்கலாம். இசையை முக்கிய பங்காக கொண்டு வெளியான இந்த படத்தின் இசை அவ்வளவு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது வருத்தமான ஒன்று.

- Advertisement -