Byju Raveendran: இந்த ஆண்டு இந்தியாவின் 200 கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் பைஜூ ரவீந்திரனின் பெயர் இடம் பெறவில்லை.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் வழக்கம் போல அம்பானி, அதானி இருவரும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இருந்த பைஜூ ரவிந்திரன் தற்போது தன் சொத்துக்களை இழந்து சரிவை சந்தித்துள்ளார்.
இதற்கான முழு காரணத்தையும் பின்னணியையும் இங்கு விரிவாக காண்போம். கடந்த 2011 ஆம் ஆண்டு தின்க் அண்ட் லேர்ன் என்ற நிறுவனத்தை பைஜூ ரவிந்திரன் தன் மனைவி திவ்யா கோகுல்நாத்துடன் இணைந்து தொடங்கினார்.
அசுர வளர்ச்சியடைந்த பைஜூஸ்
இதன் மூலம் மாணவர்களுக்கு ஆன்லைனில் டியூஷன் எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு பைஜூஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் நீட், கேட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சியும் ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பிரபலமடைந்த இந்த செயலியை 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி 1.5 கோடி மக்கள் பயன்படுத்தினார்கள்.
அதன் பிறகு கொரோனா பரவ ஆரம்பித்து ஊரடங்கு போடப்பட்டது. அப்பொழுதுதான் இந்த நிறுவனம் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்தது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது.
சரிவுக்கான காரணம்
ஆனால் அதன் பிறகு இந்த நிறுவனம் பெரும் சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது. கடன் சுமை, பொருளாதார நெருக்கடி, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காதது, நிர்வாக குழு உறுப்பினர்கள் விலகல் என பல சிக்கல் வந்தது.
இதற்கு முக்கிய காரணம் பள்ளிகள் திறப்பிற்கு பிறகு இணைய வழி கல்விக்கான தேவை ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனம் 8,245 கோடி நஷ்டத்திற்கு ஆளானது.
மேலும் அந்நிய செலாவணி முறைகேடு புகாரியிலும் இந்நிறுவனம் சிக்கியது. அதை தொடர்ந்து நடந்த அமலாக்கத்துறை சோதனையில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனம் 28 ஆயிரம் கோடிக்கு அதிகமாக அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
ஒரே வருடத்தில் தரைமட்டமான சொத்து
இதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் 9,754 கோடியாக அனுப்பி இருக்கின்றனர். அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த நிறுவனம் சரியான கணக்கு வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதனால் பல வழக்குகள் மற்றும் சவால்களை இந்த நிறுவனம் சந்திக்க நேர்ந்தது. அது மட்டுமின்றி இந்நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீடும் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது.
இப்படி ஒரே வருடத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த பைஜூ ரவிந்திரனின் தற்போதைய சொத்து மதிப்பு ஜீரோவாக உள்ளது.