ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகும் 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்.. அங்கே ஓடலைன்னா நாங்க பொறுப்பல்ல

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்து வரப்போகும் படங்களின் வரிசையை பார்க்கலாம். பெரும்பாலும் தமிழில் உள்ள சாராம்சத்தை விட்டுவிட்டு அவர்களுடைய மசாலா சினிமாவாக எடுத்து அசிங்கப்படுவார்கள் ஹிந்தி டைரக்டர்கள் வரிசையை பார்க்கலாம் வாங்க!

மாஸ்டர்: தற்போதைய சந்தை நிலவரப்படி அதிக டிமாண்ட் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அவர் படம் இயக்க தயாராக இருந்தால் இந்தியாவில் எந்த நடிகரும் தயார் தான். அந்த வகையில் அவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து மாபெரும் ஹிட்டான மாஸ்டர் படத்தை ஹிந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கப்போகிறார்கள். ஷாஹித் கபூரும் உடன் நடிக்கப்போவதாக சொல்கிறார்கள். பார்க்கலாம்!

கைதி: நம்ம பிரியாணி ஸ்பெஷல் லோகேஷின் கைதியை ஹிந்தியில் எடுக்க படு பயங்கர டிமாண்ட். எல்லாரும் எனக்கு, உனக்கு என்று போட்டி போட, ரிமேக் திலகம் அக்ஷய்குமாரை தாண்டி நம்ம சிங்கம் ரிமேக் புகழ் அஜய் தேவ்கன் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு போலா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை என்ன செய்து வைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

மாநகரம்: லோகேஷின் ஒரு படத்தையும் ஹிந்திக்காரர்கள் விட மாட்டார்கள் போல. அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான மாநகரம் படத்தை மும்பைக்கார் என்னும் பெயரில் எடுக்கின்றனர். இந்த படத்தில் விக்ராந்த் மாஸே, நம்ம விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர், இயக்குனர் சந்தோஷ் சிவன் இந்த படத்தை இயக்குகிறார். அதனால் இந்த படம் நிச்சயம் நன்றாக வரும் என்று நம்பலாம். குறைந்தபட்சம் கேமரா அருமையாக இருக்கும்.

அருவி: தமிழில் புதியவர் அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் நல்ல கவனம் பெற்ற அருவி படத்தை ஹிந்தியில் எடுக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் பாத்திமா சனா ஷைக் நாயகியாக நடிக்கிறார். கொஞ்சம் புதுமை விரும்பிகள் ஏற்றுக்கொண்ட இந்த படத்தை எப்படி கடித்து குதற போகிறார்களோ!

சூரரைப் போற்று: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் சரிந்து போன மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் தோன்றிய கதையை அருமையாக எடுத்திருந்தார் இயக்குனர். நல்ல படம் வந்தால் பொறுக்காத ஹிந்தி சினிமா, இந்த படத்தை ரீமேக் திலகம் அக்ஷய் குமாரை வைத்து எடுக்க இருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் சமீபத்தில் நடித்து கொடுத்துவிட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

விக்ரம் வேதா: தமிழில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றான விக்ரம் வேதா படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் – காயத்ரி தம்பதிகளே ஹிந்தியிலும் இயக்குகிறார்கள். மாதவன், விஜய் சேதுபதி செய்த கதாபாத்திரங்களை முறையே சைப் அலிகானும், ரித்திக் ரோஷனும் செய்கிறார்கள். பொறுத்திருந்து பாப்போம், தமிழில் நிகழ்ந்த மாஜிக் இந்தியிலும் நடக்கிறதா என்று!

ராட்சசன்: தமிழில் சமீபத்தில் வந்த திரில்லர் படங்களில் சிறந்த படம் என்றால் ராட்சசனை சொல்லலாம். இந்த படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்கிறார்கள். வழக்கம் போல நம்ம ரீமேக் திலகம் அக்ஷய் குமார் தான் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வந்த பெல்பாட்டம் படத்தை இயக்கிய ரஞ்சித் திவாரி இயக்குகிறார். மிஷன் சிண்ட்ரெல்லா என்று பெயர் வைத்துள்ளனர். பேர் எல்லாம் நல்லா தான் வைப்பாங்க! பாக்கலாம்.