கடந்த சில மணி நேரங்களாகவே தமிழ் திரையுலகம் மிகுந்த பரபரப்பில் இருக்கிறது. இதற்கு காரணம் நடிகர் விக்ரம் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இன்று அந்த படத்தின் டீசர் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. அதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் விக்ரமின் உடல்நிலை குறித்து வெளிவந்த இந்த செய்தி பலரையும் பதட்டம் அடைய வைத்துள்ளது.
இன்று அவர் அந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் மாரடைப்பின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இருப்பினும் இது குறித்த முழு தகவல்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. இதனால் தற்போது பலரும் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரமின் மேனேஜர் அவரின் உடல்நிலை குறித்து சில செய்திகளை தெரிவித்துள்ளார்.
அதாவது விக்ரமுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே காய்ச்சல் இருந்ததாம். நேற்று அவருடைய உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதயம் தொடர்பான சில பரிசோதனைகளையும் செய்திருக்கின்றனர்.
தற்போது சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உடல்நலம் தேறி வருகிறார். விரைவில் விக்ரம் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அவருக்கு ரத்த குழாய்களில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் அவருக்கு இதயத்தில் சில அசௌகரியம் இருந்ததால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும் விக்ரம் தற்போது பூரண நலமுடன் இருப்பதாகவும், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி விக்ரமின் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது.