சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல பிரபலங்கள் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியிலிருந்து போகும் பிரபலங்கள் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளனர். சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் தற்போது குக் வித் கோமாளி புகழ் என பலர் படங்களில் நடித்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அசுர வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடி நடிகராக ஆரம்பித்து நடனம், பாடல் என தன்னை ஒரு நடிகனாக மெருகேற்றிக் கொண்டார். சின்னத்திரையில் இருக்கும்போதே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
மேலும் வெள்ளித்திரையில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சிவகார்த்திகேயன் வெற்றி கண்டாலும் அதன்பிறகு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த போது பெரிய அளவில் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. அதன்பின்பு தனக்கே உரித்தான காமெடியை வைத்து படங்களை வெற்றி அடையச் செய்தார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை போல் விஜய் டிவியில் இருந்த வெள்ளித்திரைக்கு வந்தவர்தான் ரக்சன். துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் காமெடியனாக அறிமுகமானார். அதன்பின்பு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது ரக்சன் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் சிவகார்த்திகேயன் எப்படி பன்முகத்தன்மை உடையவர் என்பதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக சிங்கர் ஆகவும் பல படங்களில் பாடியுள்ளார். அதுவும் சிவகார்த்திகேயன் பாடல் குழந்தைகளை பெரிய அளவில் கவர்ந்தது.
அதேபோல் தற்போது ரக்சன் தானும் பன்முகத் தன்மை கொண்டவர் என்பதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக புதிய படத்தில் பாடல் பாடியுள்ளாராம். இதனால் தற்போது சிவகார்த்திகேயன் போல் ரக்சனும் சிங்கராக உருமாறியுள்ளார். இதனால் மீண்டும் ரக்சன் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்பது சந்தேகம்தான்.