வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஆரம்பத்திலிருந்தே பல அவமானங்களை சந்தித்த ரஜினி.. நாய்க்கு இருந்த மரியாதை கூட மனுஷனுக்கு இல்ல

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வரும் ரஜினிகாந்த்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி நட்சத்திரமாக மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் இவருக்கு இந்த இடம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை.

ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சமயத்தில் இவரை ஹீரோவாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. முக்கியமாக இவரை வைத்து படம் எடுக்க நினைத்தவர்களும் இவர் கருப்பு என்ற காரணத்தால் ஒதுக்கி வைத்தனர்.

ஏனென்றால் கலராக பள பளவென இருக்கும் நடிகர்கள் தான் ஹீரோ என்ற பிம்பம் அப்போது மக்கள் மனதில் இருந்தது. அதை எல்லாம் உடைத்தெறிந்து சாதித்துக் காட்டிய பெருமை ரஜினிக்கு உண்டு. சொல்லப்போனால் இவர் கருப்பு என்ற ஒரே காரணத்திற்காக பல நடிகைகளும் இவருடன் சேர்ந்து நடிக்க மறுத்தனர்.

ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்கிய நடிகைகளும் உண்டு. அது இப்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கும் பொருந்தும். அந்த அளவுக்கு இவர் மற்றவர்கள் அவமானமாக நினைத்த அந்த கருப்பு நிறத்தை வைத்தே ஜெயித்து காட்டிவிட்டார்.

ஆனால் இந்த சாதனைகளுக்கிடையில் அவர் கடந்து வந்த பல அவமானங்களும் இருக்கிறது. ஒருமுறை மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவரை சந்திப்பதற்காக ரஜினி அவரின் வீட்டுக்கு தன்னுடைய பொமேரியன் நாய் குட்டியுடன் சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த சாதாரணமான உடையை பார்த்த வாட்ச்மேன் அவரை உள்ளே விட மறுத்திருக்கிறார்.

பிறகு விலை உயர்ந்த அந்த நாய்க்குட்டியை பார்த்துவிட்டு ரஜினியை உள்ளே அனுமதித்திருக்கிறார். வெள்ளையாக இருந்த நாய்க்கு இருந்த மரியாதை கூட அப்போது எனக்கு கிடைக்கவில்லை என்று ரஜினி ஒரு முறை பேட்டியில் சிரித்தப்படியே கூறினார். இதுவே கருப்பு நிறத்தின் மூலம் அவர் எவ்வளவு அவமானங்களை சந்தித்திருப்பார் என்பதற்கு சான்றாகும்.

அதன் பிறகு ரஜினி தன்னிடம் இருக்கும் பிளஸ் என்ன என்று கண்டறிந்து அதை வைத்து சினிமாவில் முன்னேற ஆரம்பித்தார். இப்படி ஆரம்பித்த அவருடைய திரை வாழ்வு ஒரு கட்டத்தில் அவர் தொட்டதெல்லாம் வெற்றி என்னும் அளவுக்கு மாறியது. இப்படிப்பட்ட சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் இன்றைய தலைமுறைகளுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News