தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் ஒருவரான கார்த்தியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு விழா மேடையில் புகழ்ந்து பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி என்ன சொல்கிறார் என்பது தான் மேட்டரே.
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்த தடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். ஆனால் சரியான கதையை தேர்வு செய்து திறமையான நடிப்பால் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கியவர்கள் சிலரே.
அதில் சிவகுமாரின் மகன்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன். ஒரு முதல்பட நடிகருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என்பது சாதாரண விஷயமல்ல.
இன்றும் பருத்திவீரன் படத்தை பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. பருத்திவீரன் படத்தை பார்க்கும்போது கார்த்தியின் முதல் படம் போலவே தோணாது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பில் முதிர்ச்சியை காட்டியிருப்பார். கார்த்தி தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் மணிரத்தினத்திற்கு அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.
பருத்திவீரன் படம் தேசிய விருது வாங்கும் அளவுக்கு பேசப்பட்டது. பருத்திவீரன் படத்தில் வரும் முத்தழகு, குட்டி சாக்கு, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
பருத்திவீரன் படம் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாம். அதிலும் பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி நடித்த நடிப்பு இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது என அவரை புகழ்ந்து பேசியுள்ளார் ரஜினி.