கேமராவை பார்க்காமல் நடித்து புகழ்பெற்றவர்.. 520 படங்கள் நடித்து கண் பார்வையை இழந்த சம்பவம்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்றொரு பழமொழி கூறுவார்கள். அதுபோல தான் ஒரு கலைஞன் இருக்கும் போதும் சரி இறந்த பின்னும் சரி அவனின் புகழை இந்த உலகம் மறக்க கூடாது. அதுதான் ஒரு சிறந்த கலைஞனுக்கு அடையாளம். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகர் என்றால் அது பிரபல வில்லன் நடிகர் ராஜன் பி. தேவ் தான்.

பிறப்பால் ராஜன் ஒரு மலையாளியாக இருந்தாலும், ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தனக்கென தனி ஸ்டைல் மூலம் வில்லனாக திகழ்ந்த ராஜனை நடிப்பில் அடித்து கொள்ள ஆளே கிடையாது.

சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் படிப்பிற்கிடையில் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் ராஜன். ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்த ராஜன் பின்னர் தன் திறமையால் வெள்ளித்திரை நடிகராக உயர்ந்தார். கேமராவை பார்க்காமலே நடித்து பிரபலமான ராஜன் மலையாள சினிமாவில் நம்பர் ஒன் வில்லன் நடிகராக திகழ்ந்தார்.

பாசில் இயக்கத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான மாமாட்டிக்குட்டியம்மைக்கு என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் நுழைந்த ராஜன் சுமார் 520 படங்கள் வரை நடித்துள்ளார். இதுதவிர அச்சாமக்குட்டியோட அச்சாயன், அச்சன்றே கொச்சு மோள்க்கு, மணியறக்கள்ளன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

ராஜன் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ராஜன் லவ் டுடே, பூமகள் ஊர்வலம், செங்கோட்டை, வாய்மையே வெல்லும் என கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக மலையன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கேரள மாநில மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரான ராஜன் நீரிழிவு காரணமாக அவரது கண் பார்வையை இழந்தார். பின்னர் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஈரல் நோயால் பாதிக்கப்பட்டு அவரது 58 வது வயதில் காலமானார். இருப்பினும் இன்றளவும் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை