பல காதலுக்கு உயிர் கொடுத்த எஸ்.ஜானகி.. கேட்டாலே உருக வைக்கும் 6 பாடல்கள்

S.Janaki: ஒரு பாட்டு கேட்கும் போதே அத பாடுனது இவங்கதான்னு நம்ம மனசுல நிக்கணும். அந்த அளவுக்கு அந்த குரல் நமக்கு பரிச்சயமாக இருக்கணும். அப்படி நம் உணர்வோடு கலந்து குரல் தான் எஸ் ஜானகியின் உடையது. இப்போ இருக்க டெக்னாலஜில குரல எப்படி வேணா மாத்திட முடியும்.

ஆனா டெக்னாலஜி இல்லாத காலத்தில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையும் முத்துக்கள் தான். பழைய காலத்து ஆளுங்களுக்கு தான் ஜானகி பாட்டு பிடிக்கும்னு எந்த அவசியமும் கிடையாது. இப்போ இருக்க பசங்க கூட ஜானகி பிளேலிஸ்ட் போட்டு கேட்டீங்கன்னா கண்ணுல தண்ணி வந்துடும்.

அப்போ இருந்த பல இசையமைப்பாளர்களோட வெற்றிக்கு காரணம் ஜானகி தான். இளையராஜாவின் அறிமுக படத்தில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என ஜானகி பாடிய பாட்டு பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அதற்குப் பிறகு இளையராஜாவோடு 100க்கும் மேற்பட்ட பாடல்களில் பணிபுரிந்து விட்டார் ஜானகி. அப்படிப்பட்ட சொக்கத்தங்கமான குரலுக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜானகியின் குரலில் இந்த ஆறு பாட்டை கண்டிப்பா கேட்டுடுங்க.

‘காற்றில் எந்தன் கீதம்’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜானி படத்துல இந்த பாட்டு வரும். தன்னுடைய காதலனை பார்ப்பதற்காகவே கச்சேரியை வைத்திருப்பார் ஸ்ரீதேவி. கடைசியில் மழையால் கூட்டம் இல்லாமல் போய்விடும். ஆனால் அந்த மழையில் நின்று ஸ்ரீதேவி பாடுவார்.’ காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே’ என்ற வார்த்தையிலேயே தன்னுடைய தேடலை அழுத்தமாக சொல்லிவிடுவார்.’ நில் என்று சொன்னால் மனம் நின்றால் போதும்’ என ஆரம்பிக்கும் சரணம் இந்தப் பாட்டின் வெற்றிக்கு பெரிய பொன் கிரீடம்.

‘செந்தூர பூவே’: பாரதிராஜா என்னும் மாபெரும் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம் தான் 16 வயதினிலே. தலைப்புக்கு ஏத்த மாதிரி பதின் பருவத்தில் இருக்கும் கதாநாயகி தன்னுடைய காதலனை நினைத்து ஏங்கி பாடுவதாய் அமைந்திருக்கும். அதே வயதில் இருக்கும் ஸ்ரீதேவி வெள்ளை நிறதாவணியில், ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு பாடுவதாய் இந்த பாட்டு இருக்கும்.’ செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே, என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ என’ ஜானகி தன்னுடைய இனிய குரலில் கொஞ்சி இருப்பார்.

‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’: ஜானகிக்கு இளையராஜா இசையில் மட்டும் தான் ஹிட் பாட்டு கொடுக்கத் தெரியுமா என்ன. ஏ ஆர் ரகுமான் கூட்டணியிலும் ஜானகி பலே கில்லாடி தான். உயிரே படத்தில் அவர் பாடிய நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் இன்றுவரை பேவரைட் பிளே லிஸ்டில் எல்லோருடைய ஃபோனிலும் இருக்கிறது. ப்ரீத்தி சிந்தாவின் கண்ண குழி அழகுடன், ஜானகியின் குரலை கேட்பதற்கு அவ்வளவு கிறக்கமாக இருக்கும்.

‘கண்மணி அன்போடு’: கமலஹாசன் மற்றும் ஜானகியின் குரலில் கண்மணி அன்போடு பாடலை தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் இனி இந்திய சினிமா ரசிகர்களும் மறக்க மாட்டார்கள்.’ உண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போன மாயம் என்ன’ என்று ஜானகி பாடி இருப்பார். உண்மையிலேயே அந்த குரல் மனதில் இருந்த அத்தனை காயத்தையும் நீக்கிவிடும்.

‘நாதம் என் ஜீவனே’: இளையராஜா மற்றும் ஜானகி கூட்டணியில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் தான் காதல் ஓவியம். கண் தெரியாத காதலன், காதலியின் கொலுசு ஓசையை வைத்தே அவளை நேசிப்பது கண்களை கலங்க வைத்துவிடும். அதில் ஒரு வரியில் பாறையில் தேன் ஊறுதே என்ற வரி வரும். உண்மையிலேயே ஜானகியின் குரலில் அந்த பாட்டை கேட்கும்போது கல்லும் கனிந்து விடும் தான்.

‘சின்னதாய் அவள்’: ரஜினி மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் என்றுமே தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் தான். இந்த படத்தின் எல்லா பாடல்களும சூப்பர் ஹிட் தான் என்றாலும் சின்ன தாய் அவள் என்ற பாடல் இன்றுவரை கேட்பவர்களை அழ வைத்துவிடும். தாய் அழுதாளே நீ வர, நீ அழுதாயே தாய் வர போன்ற வரிகள் வாலியின் கைவண்ணத்தால் நெஞ்சை துளைப்பதாக இருக்கும். அந்தப் பாடலுக்கு தன்னுடைய இனிமையான குரலால் உயிர் கொடுத்திருப்பார் ஜானகி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்