இறப்பதற்கு முன் பிரதாப் போத்தன் போட்ட மரணம் குறித்த பதிவுகள்.. படித்து கண் கலங்கும் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் இன்று காலை மரணம் அடைந்தார். தமிழில் மூடுபனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் மீண்டும் ஒரு காதல் கதை, ஆத்மா உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

70 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தது திரையுலகில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவரின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் இறப்பதற்கு சரியாக 12 மணி நேரத்திற்கு முன்பு அதாவது நேற்று பேஸ்புக்கில் சில பதிவுகளை போட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மரணம், அன்பு, காதல், வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் குறித்தும் பேசி இருக்கிறார். இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து பல பதிவுகளை போட்ட பிரதாப் போத்தன் இன்று திடீரென மரணம் அடைந்தது ரசிகர்கள் பலரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் அந்த பதிவுகள் அனைத்தும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள் என்னை பொருத்தவரை அதை நான் காதல் என்பேன் என்றும் மற்றொரு பதிவில் தினமும் எச்சில்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் தான் மரணம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நோய்க்கான காரணம் என்ன என்று தெரிந்து அதை குணப்படுத்தாமல், அதன் அறிகுறிகளை மட்டுமே குணப்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் கடைசிவரை மருந்துகளை நம்பி தான் இருக்க வேண்டும், வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணம் செலுத்தியே முடிந்து விடும் என்று கூறியிருக்கிறார்.

அவரின் இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் பிரதாப் போத்தன் ஒருவேளை தன்னுடைய மரணத்தை பற்றி முன்கூட்டியே கணித்தாரா என்ற ரீதியில் பேசி வருகின்றனர். திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்த அவருடைய இந்த மறைவு சினிமா துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு உன்னத கலைஞனாக திகழ்ந்த பிரதாப் போத்தனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Next Story

- Advertisement -