என் படத்தை யாரும் பார்க்க வேண்டாம்.. போஸ்டர் அடித்து விளம்பரம் தேடிய எம்ஆர் ராதா

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் ஏகப்பட்ட ப்ரமோஷன்களும், விளம்பரங்களும் தேவைப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் ஏகப்பட்ட செலவுகளை செய்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்கி வருகின்றனர்.

ஆனால் அந்த காலத்திலேயே நடிகர் எம் ஆர் ராதா தன் படத்திற்காக வித்தியாசமான ஒரு விளம்பரத்தை செய்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த ரத்தக்கண்ணீர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சக்கைப்போடு போட்டது.

இந்த படத்தில் எம் ஆர் ராதா கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் கடவுளுக்கு எதிராக தான் இருக்கும். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் எம் ஆர் ராதா, எஸ் எஸ் சந்திரன், சந்திரபாபு, எம்என் ராஜம் போன்ற பல ஜாம்பவான்கள் நடித்திருப்பார்கள்.

இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு எம் ஆர் ராதாவின் நடிப்பும், அவர் பேசிய வசனங்களும் பெருமளவில் ரசிக்கப்பட்டது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பு அவர் மக்களுக்காக படத்தைப் பற்றி ஒரு போஸ்டர் ஒன்றை அடித்து வெளியிட்டாராம்.

அதில் அவர் இந்தப் படத்தில் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதது போல் நடித்துள்ளேன். மேலும் கடவுளுக்கு எதிராகவும், கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போலவும் பேசி இருக்கிறேன். அதனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த படத்திற்கு வரவேண்டாம்.

ஒருவேளை படத்தை பார்த்துவிட்டு இவர் கடவுளைப் பற்றி இப்படி பேசுகிறாரே, தேவையில்லாமல் காசு கொடுத்து ஏமாந்து விட்டோமே என்று யாரும் நினைக்க வேண்டாம் என்ற வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டரை அவர் மக்கள் அதிகம் கூடும் எல்லா இடங்களிலும் ஓட்டினாராம்.

இதைப்பார்த்த அன்றைய ரசிகர்களுக்கு அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகம் உண்டானது. இதன் காரணமாகவே அந்த படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரில் அலைமோதினர். இந்த விளம்பரம் தான் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது.