India | இந்தியா
உலகின் மோசமான இரும்பு மனிதருடன் மோதும் விஜய் தேவரகொண்டா.. எதிர்பார்ப்பை கிளப்பிய போஸ்டர்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் தெலுங்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் நடிக்க உள்ளாராம்.
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் என்ற படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு வீரரான மைக் டைசன் நடிக்க உள்ளார். அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கும் இப்படத்தை கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
முன்னதாக இப்படம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பு உங்களுக்காக காத்திருக்கிறது என படக்குழுவினர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர். ஆனால் அது இவ்வளவு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கும் மைக் டைசன் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் அவரது கதாபாத்திரத்தை வைத்தே படத்தில் முக்கியமான திருப்பம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மைக் டைசன் லைகர் படத்தில் இணைந்துள்ளது குறித்து படத்தின் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “முதல் முறையாக, குத்துச்சண்டை மேடையின் ராஜா இந்திய சினிமாவின் பெரிய திரைகளில் தோன்றவுள்ளார். மைக் டைசனை லைகர் குழுவுக்கு வரவேற்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.

liger-vijay-deverakonda
அதேபோல் படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஆச்சரியப்படுத்துவோம் என்று உறுதியளித்திருந்தோம். இப்போதுதான் அதைத் தொடங்கியிருக்கிறோம். இந்தியத் திரைகளில் முதன் முறையாக, எங்கள் பிரம்மாண்டமான லைகர் குழுவில், இந்த உலகின் மோசமான மனிதன், குத்துச்சண்டையின் கடவுள், சகாப்தம், மிகச்சிறந்த, இரும்பு மனிதர் மைக் டைசன்” என பதிவிட்டுள்ளார்.
