Leo Movie – Netflix: நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் வழக்கம் போல விஜய்க்கு வசூலில் கை கொடுத்திருக்கிறது. லியோ ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து இப்போது ரிலீஸ் ஆன பிறகும் கூட அந்த படத்தை சுற்றிய சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக ஒவ்வொரு நாளும், இந்த படத்தை பற்றிய ஏதாவது ஒரு சர்ச்சை தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் இன்று லியோ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 60 முதல் 90 நாட்கள் ஆன பின்பு தான் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும். படத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இந்த ரிலீஸ் தள்ளி வைக்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரே மாதத்தில் லியோ ஓடிடியில் வர இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓடிடி தளங்கள் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் படங்களின் லிஸ்ட்டை வெளியிடும். அதுபோல பிரபல ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் அடுத்த மாதம் எந்தெந்த படங்கள் அந்த தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது என லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது. இதில் லியோ படமும் இடம் பெற்று இருக்கிறது. காலையிலிருந்து இந்த விஷயம் மிகப்பெரிய வைரலாகி வருகிறது.
என்னதான் லியோ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், இப்படி ஒரே மாதத்தில் ஓடிடி தளத்திற்கு வந்தது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். இதை தொடர்ந்து இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து பார்க்கும் பொழுது தான் உண்மை தெரிந்தது.நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ஒரு அனிமேஷன் படத்திற்கும் லியோ என பெயரிடப்பட்டது தான் இத்தனை குழப்பத்திற்கும் காரணம் என்று.
ராபர்ட் ஸ்மீகல், டேவிட் வாட்ச்டென்ஹெய்ம் என்ற இருவரும் இணைந்து இயக்கிய ஆங்கில படம் தான் லியோ. இந்த அனிமேஷன் படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது. பல்லி மற்றும் ஆமை கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த அனிமேஷன் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அந்த பல்லியின் பெயர் தான் லியோ. இதன் ட்ரெய்லர் கூட சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
ஒரு பள்ளியின் வகுப்பறையில் பல வருடங்களாக லியோ என்னும் பல்லி மற்றும் ஒரு ஆமை வசித்து வருகிறது. பலதரப்பட்ட மாணவர்களை இந்த உயிரினங்களும் பார்த்து வருகின்றன. ஒரு கட்டத்தில் இந்த இடத்தில் இருந்து வெளியேறி வெளி உலகத்தை பார்க்க வேண்டும் என லியோ ஆசைப்படுகிறது. இதை மையமாகக் கொண்டு முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கிறது இந்த படம்.