பப்ஜியை விட மோசமான கேம்! பணத்தை திருடி விளையாடும் சிறுவர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

சமீபகாலமாக குழந்தைகள் அதிக நேரத்தை மொபைல் போனில் தான் செலவிட்டு வருகின்றனர். அதில் நிறைய கேம்களை டவுன்லோட் செய்து விளையாடி பொழுதை போக்கி வருகின்றனர். செல்போன்களை பற்றி அறியாத பல குழந்தைகளுக்கும் இப்போது அதில் இருக்கும் பல நுணுக்கங்களும் தெளிவாக தெரிந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு வருடங்களாக குழந்தைகளுக்கு நடக்கும் ஆன்லைன் வகுப்புகள். இதனால் செல் போனில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் அதில் பல விஷயங்களையும் நோண்டி தெரிந்து கொள்கின்றனர். இது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

அதில் முக்கியமான ஒரு பிரச்சினையாக மாறி இருப்பது குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாடி வரும் ஃப்ரீ ஃபயர் என்ற கேம். கொரியன் ஆப்பான இது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் அதிக பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. இது முழுக்க முழுக்க குழந்தைகளை மனதளவிலும், உடலளவிலும் பாதிப்படைய மட்டுமே செய்கிறது.

மேலும் இந்த விளையாட்டால் பல பெற்றோர்களும் தங்கள் பணத்தை ஆயிரக்கணக்கில் இழக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிலும் டெக்னாலஜியை பற்றி எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் பிள்ளைகள் பாடம் சம்பந்தமாக செல்போனை பார்ப்பதாக நினைத்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த விஷயம் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனால் குழந்தைகளும் விளையாட்டு ஆர்வத்தில் தெரிந்தோ, தெரியாமலோ தங்கள் பெற்றோர்களின் பணத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படி குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் ஒரு ஆப்பை உருவாக்கியிருக்கும் அந்த நிறுவனத்திற்கு பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு சிறு குழந்தைகளின் வாழ்வில் விளையாடி வருகிறது. பப்ஜி போன்ற பல ஆப்புகளை தடை செய்த தமிழக அரசு இந்த விளையாட்டை தடை செய்யாமல் இன்னும் விட்டு வைத்திருப்பது ஏன். இந்த விளையாட்டால் நிலைதடுமாறிய பிள்ளைகளை பற்றி வரும் செய்திகளை அரசு கவனிப்பதில்லையா.

எங்கேயோ இருந்து கொண்டு இங்குள்ள நம் பிள்ளைகளின் வாழ்வில் விளையாடும் அந்த நிறுவனத்தை இன்னும் தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். மாணவர்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்தால் இங்குள்ள குழந்தைகளின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்