Kamal Haasan – Shankar: எதை செஞ்சாலும் பிளான் பண்ணி பண்ணனும், இல்லன்னா அந்த விஷயம் கடைசி வரை இழுத்தடித்துக் கொண்டுதான் இருக்கும் என்பதற்கு இந்தியன் 2 படம் ஒரு பெரிய உதாரணமாக இப்போது ஆகிவிட்டது. இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த சங்கர் மற்றும் கமலுக்கு படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே சிக்கலுக்கு மேல் சிக்கல்தான்.
இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து விட்டது. 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் எதிர்பாராத விபத்தினால் அப்படியே எல்லாம் நிறுத்தப்பட்டது. அதற்கு அடுத்து கொரோனா லாக்டவுன் வந்ததால் இந்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் போனது. நடுவில் உலகநாயகன் நடித்த விக்ரம் படமும் சூப்பர் ஹிட் அடித்து விட்டது. இருந்தாலும் 40 சதவீத வேலைகளே இருந்த இந்த படம் மட்டும் இன்று வரை ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கிறது.
எல்லா படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டதாக அறிவித்திருந்த நிலையில் தொழில்நுட்ப வேலைகளுக்காக மொத்த பட குழுவும் அமெரிக்கா சென்றது. சரி இது முடிந்த பிறகு அடுத்து ரிலீஸ் தான் என்று பார்த்தால் எந்த ஒரு பிளானுமே இல்லாமல் இந்த படத்தை கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஓடும் அளவிற்கு எடுத்து வைத்திருக்கிறார்களாம். இதில் எதை கட் செய்வது எதை விடுவது என்பதே மிகப்பெரிய குழப்பமாக ஆகிவிட்டது.
இறுதியாக அடுத்து இந்தியன் 3 என மீதமிருக்கும் காட்சிகளை படமாக்கி விடலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் தான் புகுந்து விளையாடி இருக்கிறார் கமல். அதாவது இந்தியன் 2 ஆரம்பிக்கும் பொழுது அவருடைய சம்பளம் 30 கோடி. இப்போது விக்ரம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டதால் அவருடைய சம்பளம் 120 கோடி என்பதால் மூன்றாவது பாகத்தின் வேலைகளுக்காக கமல் 120 கோடியை சம்பளமாக பேசி வாங்கி விட்டாராம்.
ஆக மொத்தம் இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் 150 கோடி. லைக்காவும் இதற்கு சம்மதித்து விட்டது. இதில் மிகப்பெரிய தலைவலி யாருக்கு என்றால் அது இயக்குனர் சங்கருக்கு தான். மூன்றாவது பாகம் உருவாக்க அடுத்தடுத்து வேலைகளை செய்யவே 120 நாட்கள் ஆகிவிடுமாம். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக இந்த படத்தில் போராடிய சங்கர் இன்னும் 120 நாட்கள் இதற்காக உழைக்க வேண்டி இருக்கிறது.
சங்கர் ஒரே நேரத்தில் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு இந்த படத்தை முடித்து உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதுதான் முதல் பிளானாக இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது 120 கோடிக்காக இந்தியன் 3க்கு ஓகே சொல்லி சங்கருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறார் கமலஹாசன்.