விஜய் சேதுபதி, லாரன்ஸ் இரண்டு பேருமே வேண்டாம்.. நடிப்பு அசுரனை கமலுக்கு வில்லனாக்கிய லோகேஷ் கனகராஜ்

வெறும் மூன்று படத்திலேயே முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். அதுவும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலிருந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இருந்தாலும் தன்னுடைய குருநாதர் கமலுடன் ஒரு படமாவது செய்துவிட வேண்டும் என விக்ரம் படத்தை தொடங்கினார்.

முன்னதாக தேர்தலுக்கு முன்பாக விக்ரம் படத்தை முடித்துவிட வேண்டும் என கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் திட்டம் போட்டனர். ஆனால் கமல்ஹாசன் தேர்தலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததால் அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

விக்ரம் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முடித்துவிட்டு தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம். இந்நிலையில் எலக்சன் முடிந்த நிலையில் விரைவில் விக்ரம் படத்தை கமல் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் முன்னணி நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்ததை போல, கமலுக்கும் ஒரு முன்னணி நடிகரை வில்லனாக வேண்டுமென லோகேஷ் கனகராஜ் முடிவு செய்தார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் படத்திலிருந்து விலகிய நிலையில் தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பகத் பாசில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாகவே தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் விஜய் சேதுபதி அந்த படத்தில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்