ஜீவா கேரியரை சோலி முடித்த 6 படங்கள்.. பத்து வருஷமா விழுந்த அடியால் மீள முடியாத நிலை

ஜீவா அறிமுகமான நாட்களில் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கடந்த பத்து வருடங்களாக அவருக்கு எந்த வெற்றி படங்களும் இல்லை. மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் ஒரு நல்ல படம் கூட அவருக்கு பல வருடங்களாக அமையவில்லை. இதற்கு ஜீவா தேர்ந்தெடுத்து நடித்த கதைகள் தான் முக்கிய காரணம். ஜீவா கேரியரை முடித்து வைத்த 6 படங்கள்.

டேவிட்: இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம். இதில் விக்ரம், ஜீவா என இரு கதாநாயகர்கள் என்றாலும் இருவருடையதும் வேறு வேறு கதை, ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம் இல்லாமல் திரைக்கதையயை படு மொக்கையாக நகர்த்தியதால் படம் படு தோல்வி அடைந்தது. ‘கனவே கனவே’ பாடல் மட்டும் அனிருத் இசையில் பிழைத்து கொண்டது.

கச்சேரி ஆரம்பம் : திரைவண்ணன் என்ற இயக்குனர் இயக்கிய கச்சேரி ஆரம்பம் என்னும் படத்தில் ஜீவா நடித்தார். இந்த படத்தின் மூலம் ஜீவா கேரியர் சறுக்கியது மட்டுமல்லாமல் இந்த இயக்குனரையும் அதோடு காணவில்லை. படத்தின் ஒரே பக்கபலம் வடிவேலு தான். வேறு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை.

திருநாள்: நயன்தாரா நல்ல உச்சத்தில் இருக்கும் போது அவரை வைத்து படம் எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் எடுத்த படம். வில்லனுக்கு அடியாளாக இருக்கும் ஹீரோ , வில்லன் தனக்கு செய்த துரோகத்தால் அவரையே எதிர்த்து நின்று பழி வாங்குவது என்ற பழைய கதை. இந்த படமும் ஜீவாக்கு தோல்வியையே கொடுத்தது.

கொரில்லா: ஒரு சிம்பன்சி உதவியுடன் வங்கியை கொள்ளையடிக்க முயலும் கதை. ஒரு காமெடி பேண்டஸி கதையின் மூலம் சமூக கருத்தை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள். கூடுதல் முயற்சியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நாயகி ஷாலினியை நடிக்க வைத்தும் படம் எடுபடவில்லை.

சீறு: இயக்குனர் ரத்ன சிவா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், வழக்கமான ஆக்சன் காட்சி, அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் என சொதப்பியதால் ஜீவாவின் பிளாப் பட லிஸ்டில் சேர்ந்து விட்டது.

ஜிப்ஸி: குக்கூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராஜூமுருகனின் அடுத்த படம் தான் ஜிப்ஸி . ராஜு முருகன் ஏதாவது ஒரு பிரச்னையை கையில் எடுத்து இந்த கதையை கொண்டு போயிருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் அவர் காஷ்மீர் பிரச்சனை, காதல், மதக்கலவரம் என மொத்தமாய் போட்டு குழப்பியதால் படம் ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை.

ஜீவாக்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்தாலும் எந்த படத்திலும் அவரின் நடிப்பை குறை சொல்லவே முடியாது. ராம், கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்த ஜீவாவுக்கு இந்த நிலைமை என்பது ஆச்சர்யமே! நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு ஜீவாவுக்கு தான் ‘சிப்ரஸ் இன்டர்நெஷனல் அவார்ட்’ ராம் படத்திற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நடிகனாக மாங்கு மாங்கு என்று நடித்தால் மட்டும் போதாது, கதையை தேர்ந்து எடுக்கவும் தெரிய வேண்டும்.